நாம் செய்ய தவறியதை பைரஸியினர் சரியாக செய்கின்றனர். எஸ்.எஸ்.ராஜமெளலி
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று உலகம் முழுவதிலும் உள்ள திரையுலகினர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனை பைரஸி. குறிப்பாக் கோலிவுட்டில் இந்த பிரச்சனை தலைவிரித்து ஆடி வருகிறது. படம் ரிலீஸ் தினத்தில் ஃபேஸ்புக்கில் லைவ் செய்வது, ரிலீஸ் தினத்தன்றே திருட்டுவிசிடி, இணையதளத்திலும் ரிலீஸ் ஆவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதை ஒழிக்க நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும், அரசும் பல வழிகளில் போராடியும் பைரஸியை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் 'பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இதுகுறித்து கூறும்போது 'ரசிகருக்கு ஏற்றவாறு, பிடித்தவாறு படம் பார்க்கும் வாய்ப்பை நாம் செய்ய தவறிவிட்டோம். அதைப் பைரஸியில் இருப்பவர்கள் சரியாக செய்வதால் இந்த பைரஸியை தடுக்க முடியவில்லை' என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: 'உலகம் முழுக்கச் சினிமாவைப் பிடித்திருக்கும் பிரச்சினை 'பைரஸி'. அதைத் தடுப்பது அவ்வளவு சுலபமல்ல. நானும் பல வருடங்களாக அதை எதிர்த்துப் போராடி வருகிறேன். இந்த நாட்களில் நான் ஒன்றை உணர்ந்துள்ளேன். திரையரங்கில், தொலைக்காட்சியில், இணையத்தில் என நமது படங்களைப் பல வழிகளில் நாம் திரையிட்டு வருகிறோம்.
நாம் திரையரங்க வெளியீட்டுக்கும், தொலைக்காட்சிக்கும் எனத் தனியாக வியாபார முறையைப் பின்பற்றி வருகிறோம். ஆனால் இணையம் என்னும் ஊடகத்தின் சாத்தியத்தை உணர நாம் தவறிவிட்டோம். பைரஸியில் ஈடுபடுபவர்கள் இதில் நம்மை மிஞ்சி விட்டனர். சிலருக்குத் திரையரங்கில், சிலருக்குத் தொலைக்காட்சியில், சிலருக்குத் தங்களது மொபைல் போன்களில் படம் பார்ப்பது பிடிக்கும்.
ரசிகருக்கு ஏற்றவாறு, பிடித்தவாறு படம் பார்க்கும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அதைப் பைரஸியில் இருப்பவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் செய்வது சரி எனச் சொல்லவில்லை. அது சட்டவிரோதமானதுதான். ஆனால் அதே நேரத்தில் நாமும் அதற்கென ஒரு வியாபார முறையை இன்னும் கொண்டு வரவில்லை. அது பைரஸியை சமாளிக்கும். போலீஸோ, வழக்குகளோ, நீதிமன்ற உத்தரவோ, தனிநபர் போராட்டமோ அதைச் சமாளிக்காது. அது ஒரு எல்லை வரைதான்.
என்ன நடக்கவேண்டுமென்றால், தொலைபேசியில் படத்தை பார்க்கவிரும்புபவர், தனது தொலைபேசியில் நல்ல தரத்தில், காசு கொடுத்து படத்தை பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். அப்போது அவர்கள் பைரஸியை தேடிச் செல்வது குறையும்' இவ்வாறு எஸ்.எஸ்.ராஜமெளலி கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout