நடிகைகளுக்கு இந்த வேலை தேவையா? ஆதங்கத்துடன் ஸ்ரீப்ரியா

  • IndiaGlitz, [Monday,November 28 2016]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தொலைக்காட்சிகள் தங்களது டிஆர்பி ரேட்டை உயர்த்துவதற்காக இந்த நிகழ்ச்சிகளில் பரபரப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது ஒருபுறம் இருக்க இந்த கட்டப்பஞ்சாயத்து தேவையா? என்பதே பலரது எண்ணமாக உள்ளது.
இந்நிலையில் பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியா தனது சமூக வலைத்தளத்தில் இவ்விதமான நிகழ்ச்சிகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கணவன் - மனைவி பிரச்சனையை தீர்க்க குடும்ப நல நீதிமன்றமும், கிரிமினல் பிரச்சனைகளையும், மக்கள் பிரச்சினையை தீர்க்க நீதிமன்றமும் இருக்கிறது. அப்படியிருக்க எதற்காக சேனல்களுக்கு மக்கள் வரவேண்டும். அதற்கு நியாயம் சொல்ல இவர்கள் நீதிபதியா? இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நமக்குத் தேவையா? இதுபோன்ற நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தனது கருத்தினை ஆதங்கத்துடன் ஸ்ரீபிரியா பதிவு செய்துள்ளார். மேலும் கேமிரா முன்பு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை அல்ல இது. ஒரு நல்ல வழக்கறிஞர் அல்லது கவுன்சிலிங் செய்யும் நபர் செய்ய வேண்டிய பணி இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீப்ரியா உள்பட பலர் ஆதங்கத்துடன் இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகைகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.