உலகின் அதிவேக வீரரான உசைன் போல்டின் சாதனையை முறியடித்த இந்திய இளைஞர்

  • IndiaGlitz, [Saturday,February 15 2020]

8 முறை உலக சாதனை புரிந்த தடகள வீரர் உசைன் போல்ட்டின் சாதனையை கர்நாடக இளைஞர் ஒருவர் வீழ்த்தி இருக்கிறார். உலக சாம்பியன்ஷிப்பின் ஜாம்பவனாக விளங்கும் உசைன் போல்ட் 100 மீட்டரை 9.58 நொடியில் கடந்து 2008 இல் ஒலிம்பிக்கை வென்றார். தமிழக ஜல்லிக்கட்டு போன்றே கர்நாடகத்திலும் கம்பாலா எனப்படும் எருதினை விரட்டும் விளையாட்டு நடத்தப் படுகிறது. இந்த விளையாட்டில்  28 வயதான ஸ்ரீநிவாச கௌடா என்ற இளைஞர் எருதினை விரட்டி, உலகின் அதிவேக வீரரான உசைன் போல்டின் சாதனையை முறியடித்துள்ளார்.

கர்நாடக இளைஞர் 142.50 மீட்டர் தூரத்தை வெறுமனே 13.62 வினாடிகளில் கடந்தார் என்பதே சிறப்பு வாய்ந்தது. இந்தத் தூரம் உசைன் போல்ட்டின் 100 மீட்டர் வேகத்துடன் ஒப்பிடும் போது 100 மீட்டர் தூரத்தை வெறுமனே 9.55 வினாடிகளில் கடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. உலகின் அதிவேக வீரர் பட்டியலில் இடம்பிடித்த உசைன் போல்ட்டின் சாதனையை கர்நாடகாவில் மாடு விரட்டும் பந்தயத்தில் ஒருவர் முறியடித்தார் என்பது தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டியை போன்றே கர்நாடகத்திலும் எருது விரட்டும் போட்டி மிகவும் பாரம்பரியமானது. தமிழகத்தில் நடந்ததைப் போலவே பீட்டா அமைப்பினர் இந்த விளையாட்டிற்குத் தடை கோரி இருந்தனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கம்பாலா மாடு விரட்டும் போட்டிக்கு முதல்வர் சீதாராமையா ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார். இந்த ஆண்டு முதல் கம்பாலா மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. பொதுவாக பொங்கலை ஒட்டியே இந்தப் போட்டிகள் நடத்தப் படுகின்றன.

கர்நாடகத்தின் உடுப்பி மற்றும் பெங்களுர் விவசாயப்  பகுதிகளில் இந்த விளையாட்டு போட்டிகள் தற்போது விமரிசையாக நடத்தப் படுகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஸ்ரீநிவாச கௌடாவிற்கு  சமூக வலைத் தளங்களில் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். எந்த ஜிம்முக்கும் போகாமல் தனது உடலைக் கட்டுப் கோப்பாக வைத்திருக்கிறார். வரும் ஒலிம்பிக் போட்டியில் இவர் கலந்து கொள்ள வேண்டும் என்று சிலர் இவரின் திறமையை புகழ்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் மாடு ஓடும் வேகத்திற்கு போட்டியாளர்களை இழுத்துச் செல்லும். எனவே இந்த தூரத்தை உசைன் போல்டின் சாதனையுடன் ஒப்பிட முடியாது என்று எதிர்மறை கருத்துக்களையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.