ஸ்ரீதேவி உடல் வருகை தாமதம்! என்ன நடக்கின்றது துபாயில் ?
- IndiaGlitz, [Monday,February 26 2018]
நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர்களும், இந்திய தூதரகமும் தீவிர முயற்சி செய்து வருகிறது. சாதாரணமாக ஒருவர் துபாயில் இறந்துவிட்டால் அவரது உடல் நாட்டை விட்டு வெளியேற குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும். ஆனால் ஸ்ரீதேவி ஒரு விஐபி என்பதால் துபாயில் உள்ள இந்திய தூதரகமே துபாய் காவல்துறை உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இன்று மதியம் மூன்று மணிக்குள் ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துவிடும் என்றும், அதன்பின்னர் அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர என்னென்ன நடவடிக்கை தேவை என்பதை தற்போது பார்ப்போம்
முதலில் தடயவியல் அறிக்கை ஒப்படைக்கப்பட்டதும் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்ய எடுத்து செல்லப்படும் என்றும், அதன் பின்னர் காவல்துறையினர்களிடம் இருந்து இறப்பு சான்றிதழை பெற வேண்டும்
அதன் பின்னர் ஸ்ரீதேவி மரணம் அடைதுவிட்டதால் அவரது பாஸ்போர்ட்டை இந்திய தூதரகம் ரத்து செய்யும். பின்னர் துபாயின் குடியேற்றத்துறை உடலை அனுப்புவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்
மேலும் உடலை ஒப்படைக்க அரசு வழக்கறிஞர் அனுமதி அளித்த பின்னர் தனி விமானம் மூலம் ஸ்ரீதேவி உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வர ஏற்கனவே அனில் அம்பானியின் தனி விமானம் துபாய்க்கு நேற்று மாலையே சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.