முதலமைச்சர் ஒரு ரியல் ஹீரோ: ஸ்ரீரெட்டி பாராட்டு
- IndiaGlitz, [Saturday,April 20 2019]
திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை, ஆனால் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார் என நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளிவந்தால் இன்னும் எத்தனை பிரபலங்களின் தலை உருளும் என்ற பயம் பலரிடத்தில் உள்ளது
இந்த நிலையில் தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருவதை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்ய ராமமோகன் ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட ஒரு குழு ஒன்றை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் நடிகை சுப்ரியா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜான்சி, இயக்குநர் நந்தினி ரெட்டி, பேராசிரியை வசந்தி, மருத்துவர் ராம தேவி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அறிவிப்பு குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தெலுங்கானா அரசுக்கு நன்றி, என்னுடைய கனவுகள் இன்று நிஜமாகிவிட்டது. திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் அப்படி இல்லை. ஆனால், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார். வேசி என அழைக்கப்பட்ட நான் இதன் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என பதிவு செய்துள்ளார்.