தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தான். இலங்கை துப்பாக்கி சூட்டுக்கு என்ன செய்ய போகிறது மத்திய அரசு

  • IndiaGlitz, [Tuesday,March 07 2017]

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவதே ஒரு ரிஸ்க்கான தொழில். ஆனால் இதில் அவ்வப்போது இலங்கை கடற்படையினர்களின் அட்டூழியத்தையும் மீனவர்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவதோடு, மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வைக்கும் கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலை தமிழக, மத்திய ஆட்சிகளுக்கு இருக்கின்றது. இதற்கு முன்பு இருந்த முதல்வர்களும், இப்போது உள்ள முதல்வரும் மீனவர் பிரச்சனை குறித்து கடிதம் எழுதி கொண்டிருக்கிறார்களே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தபாடில்லை
இந்நிலையில் இதுவரை மீனவர்களை கைது செய்து கொண்டிருந்த இலங்கை படையினர் இன்று அதிகாலை துப்பாக்கி சூடும் மீனவர்கள் மீது நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு மீனவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கடல் பகுதியான ஆதம்பாலம் என்ற பகுதியில்தான் தாங்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததாகவும், அப்போது இலங்கை கடற்படையினர் எந்தவித எச்சரிக்கையும் இன்றி திடீரன தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கரைக்கு திரும்பிய மீனவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் மீனவர்களிடையே காட்டுத்தீ போல பரவி மத்திய மாநில அரசுகளின் கையாலாகாதத்தனத்தை கண்டு ஆவேசம் அடைந்துளளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து மீனவர்களின் பாதுகாப்புக்கு உறுதிமொழி கொடுக்கும் வரை போராட்டம் நடத்தவுள்ளதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதி என்பது உண்மையானால் பிரதமர் மோடி இது குறித்து வாய் திறக்க வேண்டும் என்றும் இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீனவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களும் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை வரும் என்றும் கூறியுள்ளனர்.