ரஜினி எப்போது வேண்டுமானாலும் வரலாம். இலங்கை அமைச்சர் அழைப்பு

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒருசிலரின் எதிர்ப்பு காரணமாக இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்த விஷயத்தில் அரசியல் தலைவர்கள் மீது ரஜினி அதிருப்தி அடைந்ததாகவும், அவர் தனிக்கட்சி தொடங்க எடுத்திருக்கும் முடிவுக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகே டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'ரஜினி இலங்கை வர நினைத்தால் தாராளமாக வரலாம். அவர் இலங்கையிலும் பிரபலமான நடிகர்தான். அவருக்கு அங்கு எந்த எதிர்ப்பும் இல்லை. எனவே, அவர் வருவதில் ஒரு பிரச்னையும் இல்லை' என்று கூறினார்.

ஏற்கனவே ரஜினிகாந்த் ஈழத்தமிழர்களுக்காக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும். நேரம் கூடி வரும்போது சந்திப்போம்' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதால் கூடிய விரைவில் ரஜினியின் இலங்கை பயணம் திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.