ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்': திரை முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தொடர் வெற்றி படங்களை இயக்கி வரும் இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராகிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அடுத்த படம் ஸ்பைடர்'. நம்மூர் விஜய்க்கு சமமாக தெலுங்கில் பிரபலமான மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம், எஸ்.ஜே.சூர்யா முதன்முதலாக வில்லனாக நடித்த படம் என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'ஸ்பைடர்' திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ளது இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்
மகேஷ்பாபு இந்த படத்தில் சிவா என்ற கேரக்டரில் உளவாளியாக நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங். இவர் ஏற்கனவே 'தடையற தாக்க' உள்பட ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக தற்போது உள்ளார். எஸ்.ஜேசூர்யாவை நாம் இதுவரை இயக்குனராக பார்த்திருக்கின்றோம், நடிகராக பார்த்திருக்கின்றோம், இசையமைப்பாளராக கூட பார்த்திருக்கின்றோம், ஆனால் முதல்முறையாக வில்லனாக பார்க்க போகும் படம் தான் 'ஸ்பைடர். மேலும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய பரத் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'துப்பாக்கி, ஏழாம் அறிவு படங்களுக்கு பின்னர் மீண்டும் ஹாரீஸ் ஜெயராஜ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டாகிவிட்டதால் இந்த முறை இந்த கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் மதன்கார்க்கி எழுதியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்றாலே பிரமாண்டம் மட்டுமின்றி சமூக அவலத்தை தோலுரிக்கும் வகையில் ஒரு மெசேஜ் இருக்கும் என்பது 'ரமணா' முதல் 'கத்தி' வரை தெரிந்ததே. அந்த வகையில் இந்த படம் கூறப்போகும் மெசேஜ் என்னவாக இருக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் சூப்பர் ஹிட் ஆனதில் இருந்தே இந்த படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டின்போது ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாபு குறித்து கூறியபோது, 'மகேஷ்பாபு போக்கிரி` படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை இயக்க ஆசைப்பட்டு அவரிடம் பேசினேன். பின் `துப்பாக்கி` படத்தை நானே தயாரித்து அவரை இயக்கி விட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது தான் அந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதை வீணாக்கி விடக் கூடாது என்று தான் அதை தமிழிலும் எடுத்து அவரை தமிழுக்கு கொண்டு வர ஆசைப்பட்டேன்.
எனக்கும் உடன் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே மகேஷ்பாபு ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தார். அமீர்கானுக்குப் பிறகு, படம் முடிந்த பிறகும் ஏதாவது காட்சி எடுக்க வேண்டும் என்றால் கூறுங்கள் தேதிகள் தருகிறேன் என்று சொன்ன நாயகன் என்றால் அது மகேஷ்பாபு மட்டுமே. இந்த படத்தின் வெற்றி நிச்சயம் மகேஷ்பாபுவுக்கு தான் போய்ச் சேரும்' என்று கூறினார். இதில் இருந்தே இந்த படத்திற்கு மகேஷ்பாபு கொடுத்த ஒத்துழைப்பை புரிந்து கொள்ளலாம்
நம்மூர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களின் படங்கள் தெலுங்கு மாநிலங்களில் டப் செய்யப்பட்டு ஹிட்டாவது போல தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாண், அல்லு அர்ஜூன், வெங்கடேஷ், போன்ற நடிகர்களின் படங்கள் தமிழில் ஹிட்டாகியுள்ளன. அந்த வகையில் மகேஷ்பாபுவின் பல படங்களை தமிழ் ரசிகர்கள் ரசித்துள்ளனர். அந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையில் முதன்முதலாக நேரடி தமிழ் படத்தில் மகேஷ்பாபு நடித்துள்ளார். இந்த படத்தையும் நிச்சயம் தமிழ் ரசிகர்கள் ரசித்து வெற்றிப்படமாக்குவார்கள் என்ற நம்பிக்கை படக்குழுவினர்களிடம் உள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த நம்பிக்கையை மகேஷ்பாபு தெரிவித்தார். அவர் மேலும் கூறியபோது, 'திரையுலகிற்கு வந்து 18 வருடங்கள் கழித்து, இன்று எனக்கு முதல் படம் நடிப்பது போன்ற உணர்வு கிடைத்துள்ளது. நானும் முருகதாஸும் ஒரு படத்தில் இணைய 10 வருடங்களாக முயற்சித்து வருகிறோம். அந்த முயற்சி இந்த பிரம்மாண்ட படத்தில் நிறைவேறியுள்ளது.
இந்தப் படம் ரொம்பவே கஷ்டமான படம். பின்னணி இசைக்காக அரிதாக தான் படங்கள் பேசப்படும். அந்த வகையில் ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் வல்லவர். எஸ் ஜே சூர்யா 12 வருடங்களுக்கு முன்பு என்னை இயக்கினார். இன்று என்னோடு சேர்ந்து நடித்திருக்கிறார். எனக்கு பெரும்பாலும் ரீமேக் படங்களில் விருப்பமில்லை. ஆனால் 'துப்பாக்கி' படத்தைப் பார்த்து கொஞ்சம் ஆசைப்பட்டேன். இப்போது அதன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்' படத்தில் நடித்தது மகிழ்ச்சி' என்று கூறினார்
இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறியபோது, 'இந்தியாவின் மிகப் பெரிய நடிகர்கள், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் எனக்கு அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மகேஷ் பாபு நடிக்கும் படம்! அதனாலேயே இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்' என்று கூறினார். நிச்சயம் இவர் இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என நம்பலாம்
தற்போது வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியபோது, 'நான் ரஜினி, அஜித், விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்ததில்லை. அந்த குறை தெலுங்கு சூப்பார் ஸ்டாரான மகேஷ் பாபுவுடன் நடித்தபோது தீர்ந்து விட்டது. சமூக அக்கறையுள்ள படங்களை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே நீங்கள் தமிழ் நாட்டுக்கு தேவை! கல்விக்காக ஒரு பெண் சாகும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. பாலிவுட்டுக்கு போகாமல் தமிழ்நாட்டுக்கு நல்ல கருத்துள்ள படங்களை தாருங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த படத்திற்கு இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'துப்பாக்கி' படத்திற்கு பின்னர் மீண்டும் முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றும் இவர் துப்பாக்கி படம் போலவே இந்த படமும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். ஏற்கனவே துப்பாக்கி, கத்தி மற்றும் அகிரா ஆகிய முருகதாஸ் படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை லைகா நிறுவனம் தமிழ் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதால் புரமோஷன்கள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. எனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் வரும் வெள்ளியன்று இந்த படத்தின் விமர்சனத்துடன் மீண்டும் சந்திப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com