இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி...!
- IndiaGlitz, [Tuesday,April 13 2021]
ஏழ்மை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் உட்பட பலரும் ரஷ்யாவின் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு இத்தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டாம் அலையாக கொரோனா பரவி வருவதால், இந்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மஹாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கோவிட் ஷீல்டு, கோவேக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசிகள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால், மூன்றாவதாக ரஷ்யாவிடம் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இங்கு பயன்பாட்டிற்கு கொண்டுவர நேற்று மருத்துவ வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி பற்றி:
• ரஷ்யாவில் முழுமையாக ஆய்வுகள் நிறைவேறாத போதிலும்,மலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. இதன் காரணமாக பல நாடுகளும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த தயக்கம் காட்டி வந்தன. மருத்துவ சோதனை முடிவுகள் வெளியான பின்புதான், தற்போது 55 நாடுகள் வரை அவசரகாலப்பயன்பாட்டிற்கு இத்தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.
• ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் வெக்டார் வகை தான். இதன் இரு டோஸ்களிலும் வெவ்வேறு வைரஸ் வெக்டார் (rAd26-, rAd5-S) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கோவிஷீல்டு இரு டோஸ்களிலும் ஒரே வகை வைரஸ் தான் பயன்பாட்டில் உள்ளது. ரஷ்யா ஆய்வாளர்கள் இரண்டு வைரஸ்களை பயன்படுத்துவதால் தான், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக காலம் நீடிக்கும் எனக்கூறுகிறார்கள். இந்த வைரஸ்கள் பலவீனமாக இருப்பதால், உடலில் எந்தப்பிரச்சனையையும் ஏற்படுத்தாது. இந்த தடுப்பூசியானது கொரோனாவின் புரதங்களை கொண்டுள்ளது. இதனால் அடுத்தமுறை கொரோனா வைரஸ் உடலில் நுழையும் போது, இந்த எதிர்ப்பு மருந்தானது வைரஸை அழித்துவிடும். 21 நாட்கள் இடைவெளியில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இரு டோஸ்களாக அளிக்கவேண்டும்.
• ஸ்புட்னிக் வி தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரியில், சாதாரண குளிர்சாதனப்பெட்டியில் வைத்தே பராமரித்துக்கொள்ளலாம். திரவ வடிவத்தில் -18°C சேமித்தல் நல்லது. இதை பராமரிக்க குளிர் சங்கிலி உள்கட்டமைப்பில் முதலீடு தேவைஇல்லை என்பதால் ஏழ்மை நாடுகள் உட்பட பல நாடுகளும் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
• உலகில் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி தான். ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்டவற்றில் இதன் பரிசோதனை நடத்தப்பட்டு, 91.6% இத்தடுப்பூசி பலனளிக்கும் என கூறப்பட்டுள்ளது. இலங்கை,ஈரான் உட்பட்ட 50 நாடுகளில் ஸ்புட்னிக் வி-தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
• ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லாத காரணத்தால், உலக நாடுகள் ரஷ்யாவை நோக்கி செல்ல துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.