கூவத்தூர் எம்.எல்.ஏக்களுக்கு விடுதலையா? உள்ளே நுழைந்தது அதிரடிப்படை
- IndiaGlitz, [Wednesday,February 15 2017]
அதிமுக எம்.எல்.ஏக்கள் 100க்கும் மேற்பட்டவர்களை சசிகலா தரப்பு அணி கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சசிகலா சரண் அடைய பெங்களூரை நோக்கி சென்றுவிட்டார். இந்நிலையில் அவர் சென்ற சிலமணி நேரங்களில் எம்.எல்.ஏக்களுக்கு விடுதலை கிடைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
கூவத்தூரில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியால் சிறை வைக்கப்பட்டிருந்ததாக எம்.எல்.ஏ சரவணன் கூறிய புகாரை அடுத்து இருவர் மீது கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் எம்.எல்.ஏக்களின் உண்மை நிலையை கண்டறிய எஸ்.பி. முத்தரசி அதிரடிப்படையினர்களுடன் உள்ளே நுழைந்து விசாரணை நடத்தி வருகிறார். கூவத்தூர் விடுதியில் விசாரணை நடத்தி வரும் போலீசாருடன் ஒருசில எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்து வருவதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையை அடுத்து கூவத்தூர் விடுதிக்குள் அதிரடிப் படையினர் உள்பட அதிகளவில் போலீசார் குவிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் குண்டர்கள் ரிசார்ட்டில் தங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் கூவத்தூர் விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் தவிர அனைவரும் 3 மணிக்குள் வெளியேற போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனவே இன்னும் ஒருசில நிமிடங்களில் எம்.எல்.ஏக்கள் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.