நீட் தேர்வு; தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சிறப்பு சலுகை!!!

  • IndiaGlitz, [Saturday,March 21 2020]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 சட்டப்பிரிவின் கீழ் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான சில சலுகைகளை அறிவித்து இருக்கிறார். இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் பயன்பெறும் விதமாக சில சலுகைகளை அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளார்.

இந்தச் சலுகையானது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் உள்ஒதுக்கீடு வழங்குவதாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த அளிவிலான இடங்களையே பெற்று வந்தனர். இதைக் கண்காணிக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான ஆய்வும் நடத்தப் பட்டது. இந்த ஆய்வுமுடிவுகள் வெளியானதை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க கொண்டுவரப்பட்டுள்ள சிறப்பு சட்டத்தின் மூலமாகப் பலர் பயன்பெறுவர் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக கிராமங்களில் பயிலும் மாணவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும் எனவும், உள்ஒதுக்கீடு கிடைக்கும்போது அதிக மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வசதி செய்து கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் பல முனை போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு தற்போது இந்த உள்ஒதுக்கீடு சிறப்பு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.