பிரதமர் மோடிக்காக அமெரிக்காவில் தயாராகும் அதிநவீன சொகுசு விமானம்..! வெறும் 8,458 கோடி ரூபாய் தான்.
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க ஜனாதிபதி போலவே அவர் பயணிக்கும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமும் ரொம்பவேபிரபலம். போயிங் நிறுவனத்தின் 747-200- பி ரக விமானங்கள்தான் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமாக பயன்படுத்தப்படுகின்றன. சகல வசதிகளும் கொண்ட இந்த விமானத்தை ஏவுகணைகளாலும் கூடத் தாக்க முடியாது. இந்தியப் பிரதமர் மோடியும் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர். மோடி தன் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஏர் இந்தியாவின் போயிங் -747 ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகிறார். தற்போது, இந்தியாவின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களுக்கு ஏர்ஃபோர்ஸ் ஒன் போன்ற விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படும்.
ஏர் இந்தியாவே கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் வி.வி.ஐ.பி-க்கள் பயன்பாட்டுக்காக, இரண்டு ஜம்போ விமானங்கள் பிரமிக்கத்தக்க நவீன வசதிகளுடன் தயாராகின்றன. இதற்காக, 777-300 ஈ.ஆர் ரக விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. விமானங்களை வி.வி.ஐ.பி-க்கள் பயணத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க தற்போதைய பட்ஜெட்டில் ரூ. 810.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை உள்ளிட்ட Special Extra Section Flight என்று சொல்லப்படும் பிரத்யேக வடிவமைப்புக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக இந்த விமானங்களை உருவாக்க கிட்டத்தட்ட 1.18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ.8,458 கோடி வரை செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வமாக விமானங்களைத் தயாரிக்க இவ்வளவு தொகை செலவாகும் என்று அறிவிக்கவில்லை. எனினும், இந்த விமானங்களின் விலை மற்றும் அதில் பொருத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களை கருத்தில்கொண்டு செலவினம் கணிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் பலவிதமான முக்கிய அம்சங்களுடன் உருவாக்கப்படுகிறது. பிரமாண்டமான இந்த விமானத்தில் GE90-115BL இரட்டை இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த இன்ஜின்கள் ஸ்பேராகவும் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மதிப்பின்படி இன்ஜின்களின் விலை 110 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இதுதவிர, விமானத்தின் பைலட்டுகள் கேபினை மாற்றியமைத்து கட்டமைக்கமட்டும் 132 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா ஒன் விமானத்தின் ஸ்பெஷலே ஏவுகணையால் அதைச் சுட்டுவீழ்த்த முடியாது. ஏவுகணைப் பாதுகாப்பு தொழில்நுட்பம் எனப்படும் Large Aircraft Infrared Countermeasures (LAIRCAM) மற்றும் Self-Protection Suites (SPS) தொழில்நுட்பத்தை இந்த விமானம் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 190 மில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. எஸ்.பி.எஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் இந்திய விமானங்கள் இவைதான். எஸ்.பி.எஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டால், எதிரிகளின் ரேடார்களைச் செயலிழக்க வைக்கமுடியும்.
விமானத்தை நோக்கி ஏவுகணை வந்தால் பைலட்டுகள் உத்தரவில்லாமல் தானாகவே இடை மறிக்கும் ஏவுகணை பாய்ந்து செல்லும். விமானத்தை நோக்கி ஆபத்து விளைவிக்கும் எந்தப் பொருள்கள் வந்தாலும், இந்தத் தொழில்நுட்பம் டிராக் செய்து விடும். நவீன தொழில்நுட்பத்தை கையாளத் தெரிந்த இந்திய விமானப்படை பைலட்டுகளே ஏர் இந்தியா ஒன் விமானத்தையும் இயக்குவார்கள். இதற்காக, 4 முதல் 6 விமானப்படை பைலட்டுகள் தயார்படுத்தப்பட்டு வருகிறார்கள். டல்லாஸில் உள்ள போயிங் நிறுவன தொழிற்சாலையில், தயாராகும் விமானங்கள் வரும் ஜூலை மாதத்தில் இந்தியா வசம் ஒப்படைக்கப்படவுள்ளன. இதுவரை, 5,552.08 கோடி ரூபாய் இந்திய வி.வி.ஐ.பி-க்களின் விமானங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு இந்த விமானம் 'மிதக்கும் அரண்மனை' போன்ற உணர்வைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனக்கென தனி விமானம் என்ற பெருமிதத்துடன் பிரதமர் மோடி இனிமேல், வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com