பஞ்சு அருணாச்சலமும், ரஜினி-கமலும். ஒரு பார்வை
- IndiaGlitz, [Wednesday,August 10 2016]
பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட பஞ்சு அருணாச்சலம் மறைந்த சோகம் கோலிவுட் திரையுலகினர்களை ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். கே.பாலசந்தரை அடுத்து இருவருக்கும் இரண்டாவது குருவாக விளங்கியவர் என்று கூட சொல்லலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த நிலையில் அவரை முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் 'ஆறிலிருந்து அறுபது வரை' படத்தில் நடிக்க வைத்து, அந்த படத்தை வெற்றிப்படமாகவும் மாற்றியவர் பஞ்சு ஒருவரே. அதுமட்டுமின்றி அவர் தயாரித்த இன்னொரு படமான 'எங்கேயோ கேட்ட குரல்' படத்திலும் ரஜினியின் மாறுபட்ட நடிப்பை ரசிக்க ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
மேலும் 'தில்லுமுல்லு' படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை கேரக்டரில் நடித்த படங்கள் 'தம்பிக்கு எந்த ஊரு' மற்றும் 'குருசிஷ்யன்'. இந்த இரண்டு படங்களிலும் ரஜினியின் நகைச்சுவை நடிப்பை இப்போது தொலைக்காட்சியில் பார்த்தாலும் ரசிக்கலாம்.
பஞ்சு அருணாச்சலம் வசனம் எழுதி, ரஜினிகாந்த் நடித்த 'வீரா' நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் அம்சங்கள் பொருந்திய படமாகவும், வெற்றிப்படமாகவும் அமைந்த நிலையில் 'தர்மதுரை' ரஜினியின் மற்றொரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியது என்று கூறலாம்.
மேலும் ப்ரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாண்டியன் ஆகிய ரஜினியின் படங்களும் பஞ்சு அருணாசலத்தின் கைவண்ணத்தில் உருவாகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரஜினியின் திரையுலக வளர்ச்சியில் பஞ்சு அருணாச்சலம் அவர்களின் பங்கு மிகப்பெரியது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை போலவே கமல்ஹாசனின் திரையுலக வாழ்விலும் பல வெற்றிக்கு காரணமாக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். கமல்ஹாசன் அப்பாவி வேடத்தில் நடித்த 'கல்யாணராமன்' என்ற வெற்றி படத்தை தயாரித்த பஞ்சு அருணாச்சலம், அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'ஜப்பானில் கல்யாணராமன்' படத்தை ஜப்பானில் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த முழுநீள நகைச்சுவை படமான 'மைக்கேல் மதனகாமராஜன்' திரைப்படமும் இவருடைய தயாரிப்பில் வெளியான வெற்றி படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி கமல்ஹாசன் நடித்த 'உல்லாச பறவைகள்', மீண்டும் கோகிலா', 'எல்லாம் இன்பமயம்', சகலகலா வல்லவன்', 'தூங்காதே தம்பி தூங்காதே', 'அபூர்வ சகோதரர்கள், 'சிங்காரவேலன்', ஆகிய படங்களுக்கு பஞ்சுஅருணாச்சலம் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். மேற்கண்ட படங்களில் பெரும்பாலானவை மிகப்பெரிய வெற்றியை அடைந்து கமல்ஹாசனை உச்சத்திற்கு அழைத்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் இருபெரும் ஜாபவான்களான ரஜினி, கமல் ஆகியோர்களுக்கு மட்டுமின்றி திரையுலகில் நுழையும் ஒவ்வொருவருக்கும் நல்ல வழிகாட்டியாகவும், ஆசான் போன்று விளங்கியவருமான பஞ்சு அருணாச்சலம் அவர்களின் மறைவு அவர்கள் இருவருக்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது.