விவேக் குற்றச்சாட்டுக்கு ஒரு மணி நேரத்தில் பதிலளித்த விமான நிறுவனம்

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது படங்களில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் சமுதாய சிந்தனைகளை தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று அவர் ஒரு முக்கிய குற்றச்சாட்டை பிரபல விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது வைத்துள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் உள்ளே இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புகள் ஒலிக்கப்படுவதாகவும், தமிழகத்திற்கு வரும் விமானத்தில் கூட தமிழில் அறிவிப்பு ஒலிக்கப்படுவதில்லை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் விவேக் புகார் கூறியிருந்தார். எனவே தமிழ் மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரியும் வகையில் தமிழகத்திற்கு வரும் விமானங்களில் தமிழிலும் அறிவிப்பு ஒலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

விவேக்கின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், 'தங்களுடைய மேலான கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் கோரிக்கையை எங்கள் குழுவினர்களுடன் இணைந்து பரிசீலனை செய்யவுள்ளோம். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்போம் என்று கூறியுள்ளது. தனது கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விவேக் நன்றி தெரிவித்துள்ளார்.