கொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி! வைரலாகும் வீடியோ
- IndiaGlitz, [Saturday,September 26 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று உடல்நலக் குறைவால் காலமான நிலையில் அவருடைய மறைவு செய்தி கேட்டு இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்னும் எஸ்பிபியின் மறைவை ஜீரணிக்க முடியாமல் உள்ளனர்
இந்த நிலையில் எஸ்பிபி கடைசியாக கலந்து கொண்ட நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. டோக்கியோ தமிழ் சங்கம் நடத்திய ஆன்லைன் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக கலந்துகொண்டு எஸ்பிபி அவர்கள் பேசினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் குறித்து கூறிய கருத்து எத்தனை உண்மை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் கூறியதாவது:
கொரோனாவை யாரும் திட்ட வேண்டாம். அது நாம் செய்த பாவம் தான். நமது முன்னோர்கள் நமக்கு ஒரு சுத்தமான பூமியை கொடுத்து விட்டுச் சென்றார்கள். ஆனால் நாம் இயற்கையை மாசு படுத்தி ஒரு சுடுகாடு போன்ற பூமியை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டு செல்கிறோம். நாம் இயற்கையை பெருமளவு சேதப்படுத்திவிட்டோம். அதன் பயனாகத்தான் தற்போது கொரோனா வைரஸ் நம்மை ஆட்டுவித்து வருகிறது. அதை அனுபவித்து தான் ஆக வேண்டும்’ என்று சுற்றுச்சூழல் மாசு குறித்து எஸ்பிபி கூறியுள்ளது எத்தனை உண்மையானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ’இனி வரும் காலத்தில் ஆன்லைன் மூலமே நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் பாடகர் ஒரு இடத்திலும், இசையமைப்பாளர் ஒரு இடத்திலும், இசை குழுவினர்கள் ஒரு இடத்திலும் இருந்துதான் பாடல்கள் பாடப்படும் நிலை ஏற்படலாம் என்றும் எஸ்பிபி கூறினார்
எஸ்பிபி அவர்களின் இந்த கடைசி நேரடி நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும், இந்த நிகழ்ச்சி தான் எஸ்பிபி அவர்கள் கலந்து கொண்ட முதலும் கடைசியுமான ஆன்லைன் நேரடி நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது