அஜித் இறுதிச்சடங்கிற்கு வராதது குறித்து விளக்கமளித்த எஸ்பிபி சரண்
- IndiaGlitz, [Monday,September 28 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அவருக்காக இரங்கல் தெரிவித்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பதும் பலர் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எஸ்பிபியால் சினிமா வாய்ப்பை முதன்முதலாக பெற்ற அஜித் மட்டும் ஏன் எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்றும் ஏன் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்றும் ஒரு சிலர் சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சினையைக் கிளப்பினர். இந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்பிபி சரண் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அஜித் எனக்கும் நெருங்கிய நண்பர், எனது அப்பாவுக்கும் நல்ல நண்பர். அவர் இறுதிச் சடங்குக்கு வந்தாரா? இல்லையா? என்பது குறித்த பிரச்சனையை ஏன் இப்போது இழுக்க வேண்டும்? அவர் என்னிடம் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தாரா? தெரிவிக்கவில்லையா? என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. அதை அவர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
எஸ்பிபியின் மறைவுக்கு உலகத்தில் உள்ள அனைத்து இசை ரசிகர்களும் வருத்தமடைந்து அவருக்கு வீட்டிலிருந்தே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல அஜித்தும் வீட்டிலிருந்தே கண்டிப்பாக வருத்தப்பட்டு இருப்பார், அஞ்சலி செலுத்தியிருப்பார். அவர் நேரடியாக வரவில்லையா என்பது குறித்த பிரச்சனையை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று எஸ்பிபி சரண் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்பிபி சரணின் இந்த விளக்கத்தை அடுத்து இனிமேலாவது அஜித் ஏன் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது குறித்த பிரச்சினையை நெட்டிசன்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.