எஸ்பிபி உடல்நிலை குறித்து சரண் மற்றும் மருத்துவமனையின் தகவல்

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து எஸ்பிபி சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தினந்தோறும் தகவல்களை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையும் வெளிவந்துள்ளது.

இதன்படி எஸ்பிபி சரண் அவர்கள் கூறியதாவது: எஸ்பிபி அவர்கள் உடல்நிலை தற்போது சீரான நிலையில் தேறி வருவதாகவும் அவரது நுரையீரலில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு நல்ல செய்தி என்னவெனில் எஸ்பிபி அவர்கள் தன்னுடைய பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் பாடவும் முயற்சிக்கின்றார் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு சிலவற்றை பேப்பரில் எழுதி சொல்ல நினைப்பதை முயற்சிக்கிறார் என்றும் ஆனால் அவரால் பேனாவைக் கையில் பிடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்பிபி அவர்களின் உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் விரைவில் தனது தந்தை பூரண நலத்துடன் வீடு திரும்புவார் என்றும் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பமே அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ’எஸ்பிபி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சுயநினைவுடன் உயிர்காக்கும் சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறது என்றும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன் எஸ்பிபி அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.