கொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி
- IndiaGlitz, [Sunday,March 29 2020]
உலகம் முழுவதும் ஜாதி, மத, இன வேறுபாடின்றி ஏழை முதல் பணக்காரர்கள் வரை, சாமானியர் முதல் உலகத் தலைவர்கள் வரை கொரோனா வைரஸ் தாக்கி வருவது தெரிந்ததே. உலக தலைவர்கள் பலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக பிரேசில் நாட்டு அதிபரின் செயலாளர், கனடா பிரதமரின் மனைவி, பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர், ஈரான் நாட்டின் துணை அதிபர், ஸ்பெயின் நாட்டின் பிரதமரின் மனைவி மற்றும் பிரிட்டன் நாட்டின் இளவரசர், பிரிட்டனின் பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா என்பவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 1933ஆம் பிறந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா, ஸ்பெயினில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த இளவரசியின் இறுதிச்சடங்கு வரும் வெள்ளியன்று நடைபெறும் என தெரிகிறது.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் இதுவரை 72 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.