மேலும் 2 விவிஐபிகளை தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Sunday,March 15 2020]
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பொதுமக்களை மட்டுமின்றி அரசியல்வாதி மற்றும் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகின்றது. இந்த நிலையில் ஒருசில விவிஐபிக்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.,
ஏற்கனவே ஈரான் நாட்டின் துணை அதிபர், அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர், பிரிட்டன் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர், மற்றும் கனடா நாட்டின் பிரதமரின் மனைவி ஆகியோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இந்தோனேசியா நாட்டின் போக்குவரத்து அமைச்சர் புடி கார்யா என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் புடி கார்யா தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் கூட அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் ஸ்பெயின் நாட்டின் பிரதமரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் மனைவி தற்போது படிப்படியாக குணமாகி வருவதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்த மனித இனத்தை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் விவிஐபிக்களையும் பயமுறுத்தி வருகிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.