மலைகிராம பெண்ணின் போலீஸ் கனவை நிறைவேற்ற முன்வந்த எஸ்பி!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!
- IndiaGlitz, [Friday,July 24 2020]
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் தொகுதியில் உள்ள ஒரு மலை கிராமம் பாலமலை. இது கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் இருப்பதால் சரியான சாலை வசதிகூட இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த மலைக் கிராமத்தில் சுமார் 5000 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் ஜெயந்தி என்னும் ஒரு சிறுமி முதல் முறையாக தனது 10 ஆம் வகுப்பை நிறைவு செய்திருக்கிறார். இத்தகவலை கேட்டறிந்த அம்மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தீபா கனிகர் ஐஏஎஸ் அந்த மாணவியை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகம் வந்த ஜெயந்தியைப் பார்த்து நெகிழ்ந்த தீபா கனிகர், உனக்கு என்ன ஆக வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். உங்களைப் போன்று ஒரு சிறந்த அதிகாரியாக ஆகவேண்டும் என்று ஜெயந்தி கூறவே மலைத்து போயிருக்கிறார். உடனே மாணவி ஜெயந்தியின் கல்விக்கு ஆகும் ஒட்டுமொத்த செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். இச்சம்பவத்தால் நெகிழ்ந்து போயிருக்கிறார் மாணவி ஜெயந்தி. பின்பு, இந்திய குடிமைப் பணிக்கு உதவும் சில புத்தகங்களைக் கொடுத்து மாணவியையும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் தற்போது எஸ்பி தீபா கனிகருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.