மயக்க நிலையில் இருந்து மீண்ட எஸ்பிபி: ரசிகர்கள் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Sunday,August 16 2020]

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 5ஆம் தேதி கொரனோ தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் மாலை தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து இருந்தது. இதனால் கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் இருந்தது

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா, கவியரசு வைரமுத்து உள்பட பல திரையுலக பிரமுகர்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மீண்டுவர வேண்டும் என்று தங்களது சமூக வலைதளங்களில் உருக்கமான பதிவுகளை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று மாலை வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்பிபி சரண் அவர்கள், தனது தந்தை உடல்நிலை சீராக இருப்பதாகவும் உங்களுடைய பிரார்த்தனைகள் மூலம் அவர் விரைவில் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை தான் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் அவ்வப்போது கண் விழித்து பார்ப்பதாகவும், மயக்க நிலையிலிருந்து அவர் மீண்டு விட்டதால் அவர் விரைவில் குணமாக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் நுரையீரல் தொற்றுக்காக வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மயக்க நிலையிலிருந்து மீண்டு உள்ளதால் அவர் விரைவில் குணமாகி விடுவார் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்