தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எஸ்பிபி போட்ட கண்டிஷன்: தயாரிப்பாளர் தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைந்து இரண்டு நாட்கள் ஆன போதிலும் அவரை பற்றிய செய்திகளும், அவருடன் பழகியவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன

அந்த வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் எஸ்பிபி அவர்களை ஒரு நிகழ்ச்சிக்காக அணுகியபோது அவர் போட்ட ஒரு கண்டிஷன் குறித்து பகிர்ந்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எனக்கு இப்போதும் நன்றாக அவர் கூறிய வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறது. குழந்தைகள் பாடல்கள் பாடும் ஒரு பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவரிடம் அனுமதி கேட்க சென்று இருந்தேன். அப்போது அவர் ஒரு கண்டிஷன் போட்டார். அது என்னவெனில் இந்த நிகழ்ச்சியின் போது ஒரு குழந்தைகூட அழுவதை நான் அனுமதிக்க மாட்டேன். அப்படியே அழுதாலும் அவர்களை படம்பிடித்து டிஆர்பிகாக அந்த அழுகையை பயன்படுத்தக் கூடாது’ என்று கண்டிஷன் போட்டார்

அவருடைய கண்டிஷனை நான் முழு அளவில் ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி அந்த கண்டிஷன் எனது தொலைக்காட்சிக்கான பார்வையையும் மாற்றியது: நன்றி எஸ்பிபி அவர்களே! என்று ஸ்வப்னா தத் பகிர்ந்துள்ளார்