மூன்றே மணி நேரத்தில் விண்வெளி பயணம்… விண்வெளித் துறையில் புதிய சாதனை!!
- IndiaGlitz, [Thursday,October 15 2020]
ரஷ்யா விண்கலம் ஒன்று நேற்று பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு வெறுமனே 3 மணி நேரத்தில் பயணித்து புதிய சாதனையைப் படைத்து இருக்கிறது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இதற்குமுன் சரக்குப் பொருட்களை ஏற்றிச்சென்ற விண்கலம் மட்டுமே விண்வெளி மையத்திற்கு இத்தனை வேகமாக பயணம் மேற்கொண்டது. தற்போது வீரர்களை ஏற்றிச்சென்ற ரஷ்ய விண்கலம் விண்வெளித்துறையில் புதிய மைல்கல்லை படைத்து இருக்கிறது.
விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வசதியாக ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் சொந்தமாக விண்வெளி மையத்தை அமைத்து இருக்கின்றன. அங்கு பணியாற்றுவதற்காக சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து அனுப்பப் படுவார்கள். அந்த வகையில் நேற்று அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தைச் சேர்ந்த கேத்லீன் ரூபின்ஸ், ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி ரைசி கோவ் மற்றும் செர்ஜி குட்– ஸ்வெர்போவ் ஆகிய 3 விஞ்ஞானிகளும் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் செய்தனர்.
கஜகஜஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட சோயு எம் எஸ் 17 எனும் இந்த விண்கலம் நேற்று 3 விண்வெளி வீரர்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட 3 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இதனால் பயண நேரம் பாதியாக குறைந்து இருக்கிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். விண்வெளித் துறையில் இதுபோன்ற முன்னேற்றமான நிகழ்ச்சிகள் வரவேற்கத் தக்கது என்றும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.