மாஸ்க் போட்டுக்கொண்டு எப்படி சாப்பிடுவது? அசத்தலான புதிய கண்டுபிடிப்பு!
- IndiaGlitz, [Saturday,February 05 2022]
கடந்த 2 வருடங்களாக மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளி போன்ற வார்த்தைகளையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலும் மாஸ்க் என்ற ஒரு விஷயத்தை அணியாமல் வெளியே போனால் அரசாங்கம் ஆயிரக்கணக்கில் அபராதத்தை விதிக்கிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் பொது இடங்களில் பாதுகாப்பாகச் சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் வசதியாக தென் கொரிய நிறுவனம் ஒன்று மூக்கிற்கு மட்டும் அணியும் மாஸ்க் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கிறது. Atman எனும் அந்த நிறுவனம் மூக்குக்கு மட்டும் அணியும் மாஸ்க்கை தற்போது Kosk-Mask எனும் பெயரில் விற்பனை செய்துவருகிறது. 10 டப்பாக்கள் அடங்கிய இந்த மூக்கு மாஸ்க் கிட்டத்தட்ட 8.13 டாலர் இந்திய மதிப்பில் 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு டப்பாவில் 2 மாஸ்க் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூக்கு மாஸ்க்கை தவிர இந்த நிறுவனம் பொதுவான மாஸ்க்கில் இருந்து வாய் பகுதியை மட்டும் தனியாக அகற்றும்படி ஒரு மாஸ்க்கையும் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இந்த விலை 1.65 டாலர்கள் இந்திய மதிப்பில் 125 ரூபாய். பொதுவெளியில் சாப்பிடுவதற்கம் தண்ணீர் குடிப்பதற்கும் வசதியாக இந்த மூக்கு மாஸ்க் தயாரிக்கப்பட்டு இருப்பது குறித்து மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த மூக்கு மாஸ்க்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கணிசமாக உதவும் என்றே சொல்லப்படுகிறது. காரணம் கொரோனா வைரஸ் மூக்கு வழியாகவே நோய்ப்பரவலை ஏற்படுத்துகின்றன என சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் தென்கொரியாவில் தற்போது மூக்கு மாஸ்க் பரவலாக விற்பனையாகி வருகிறது.