தென்னிந்திய பிரபலம் - தொழிலதிபர் காலமானார்.. ரஜினிகாந்த் உட்பட பலர் இரங்கல்..!
- IndiaGlitz, [Saturday,June 08 2024]
தென்னிந்திய அளவில் பிரபலமான தொழிலதிபர் ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் உரிமையாளர் ராமோஜிராவ் காலமானதையடுத்து ரஜினிகாந்த், சிரஞ்சீவி, குஷ்பு உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராமோஜிராவ் பிலிம் சிட்டி, ஈடிவி தொலைக்காட்சிகள், ஈநாடு செய்தித்தாள் உள்பட பல நிறுவனங்களை நடத்தி வருபவர் ராமோஜி ராவ். ஆந்திர மாநிலத்தின் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆன இவர், கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருது பெற்ற ராமோஜிராவ் அவர்களுக்கு சொந்தமான ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் தென்னிந்தியாவில் தயாராகும் பல படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ’பாகுபலி’ ’வலிமை’ ’புஷ்பா’ ’குட்நைட்’ உட்பட பல படங்கள் இங்கு படமாக்கப்பட்டது தான். இந்த நிலையில் ராமோஜிராவ் அவர்களின் மறைவுக்கு திரையுலகினர், ஊடகத்துறையினர், தொழிலதிபர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
ரஜினிகாந்த் இரங்கல் செய்தி: எனது வழிகாட்டியான ராமோஜிராவ் அவர்களின் மறைவை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். பத்திரிகை, சினிமா மற்றும் அரசியலில் ஒரு சிறந்த கிங் மேக்கராக இருந்து வரலாற்றை உருவாக்கியவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.