29 வயதில் ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்… ரசிகர்கள் அதிச்சி!

செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்விப் பெற்றிருக்கிறது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து அந்த அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான குயிண்டன் டிகாக் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

29 வயதான குயிண்டன் டிகாக் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்காக களமிறங்கிய குயிண்டன் டிகாக் இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3,300 ரன்களை குவித்து 6 சதம், 22 அரைச்சதங்களை விளாசியுள்ளார்.

மேலும் தென்னாபிரிக்க அணியின் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் இவர் இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாகவும் பதவிவகித்துள்ளார். பின்னர் மோசமான ரன் ரேட்டைத் தொடர்ந்து அவர் பதவிவிலகியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா இந்தியாவுடன் இணைந்து 3 டெஸ்ட் போட்டிக்கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதன் 2, 3 ஆவது போட்டிகளில் மட்டும் கலந்துகொள்ளும் குயிண்டன் டிகாக் இதற்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனக் குறிப்பிட்ட இவர் தன்னுடைய மனைவி ஷாஷா மற்றும் பிறக்கப்போகும் தனது குழந்தைக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று குயிண்டன் டிகாக் கூறியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.