நீச்சல் அறிவுரை டுவீட்டை திடீரென நீக்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் சற்றுமுன் தனது மகனுக்கு நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து நீச்சலின் முக்கியத்துவம் குறித்தும் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினார். இதுகுறித்த செய்தியையும் நான் பார்த்தோம். ஆனால் இந்த புகைப்படத்துடன் கூடிய டுவீட்டை செளந்தர்யா சற்றுமுன் நீக்கிவிட்டார்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை இருந்து வரும் நிலையில் நீச்சல் குளத்தில் குளிப்பது இப்போது அவசியமா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் பலர் எழுப்பினர். டுவிட்டரில் உள்ள திடீர் போராளிகள் செளந்தர்யா சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளாமல் அநாகரீகமான கமெண்டுக்களை பதிவு செய்து வந்தனர்.

இதனையடுத்து செளந்தர்யா, நீச்சல் குறித்த டுவீட்டை டெலிட் செய்துவிட்டார். தற்போது நாம் சந்தித்து கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்சனைகளுக்கு இடையே இந்த புகைப்படம் பதிவு செய்தது சரியாக இருக்காது என்பதால் அதனை டெலிட் செய்துவிட்டேன். சிறு குழந்தைகள் நீச்சல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அந்த டுவீட்டின் நோக்கமாக இருந்தது. இருப்பினும் தண்ணீரை சேமிப்பதும் முக்கியம்தான்' என்று செளந்தர்யா இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.