ஷோபியாவின் சிம்கார்டு, பாஸ்போர்ட் முடக்கம்: தந்தை குமுறல்

  • IndiaGlitz, [Thursday,September 06 2018]

கனடாவில் ஆராய்ச்சி படிப்பை படித்து வரும் சோபியா என்ற மாணவி சமீபத்தில் விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்னிலையில் 'பாசிச பாஜக ஒழிக' என்று கோஷம் போட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.

அதன் பின்னர் சோபியா கைது, ஜாமீன், அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு என பரபரப்பான சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில் தற்போது விடுமுறைக்கு வந்துள்ள சோபியா மீண்டும் தனது படிப்பை தொடர கனடாவுக்கு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

சோபியாவின் சிம்கார்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சி நடப்பதாகவும் அவருடைய தந்தை சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தமிழிசை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது தான் கொடுத்த புகார் மீதும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் தனது மகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சட்டப்படி சந்திக்க தான் தயாராக இருப்பதாக அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.