மீண்டும் சர்வதேச அங்கீகாரம் பெறும் சூரி படம்.. தயாரிப்பாளர் பெருமிதம்..!
- IndiaGlitz, [Sunday,June 23 2024]
நடிகர் சூரி நடித்த ’கருடன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் அவருடைய இன்னொரு படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
சூரி மற்றும் நிவின் பாலி நடிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஏழு கடல் ஏழுமலை’ என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டி பிரிவான பிக் ஸ்கிரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு போட்டியிட்டது.
இந்த நிலையில் தற்போது இதே படம் ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பிரமிக்கத்தக்க வரவேற்பை தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றொரு அங்கிகாரத்தை பெற்றிருக்கிறது.
ரொமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ் நெபோகா நகரத்தில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் தேர்வாகி இருப்பது மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களை கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகி இருக்கிறது.
இவ்வாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.