சூர்யா மற்றும் சுதா கொங்காரா இணைந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த படம், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்
சாதாரண குடும்பத்தில் பிறந்த ஏழை இளைஞன் ஒருவன், கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றால் என்னென்ன பிரச்சினைகள் வரும்? அந்த பிரச்சனைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன? ஏழை ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பதற்கு பணக்காரர்கள் எப்படி ஒற்றுமையாக சேர்கிறார்கள்? அதையும் மீறி ஒரு இளைஞனால் வெற்றி பெற முடியுமா? என்பதுதான் சூரரைப் போற்று படத்தின் கதை
ஏழை குடும்பத்தில் மதுரை அருகே சோழவந்தான் என்ற ஊரில் ஒரு புரட்சியாளரின் மகனாக பிறந்த மாறன், தந்தை போலவே சொந்த ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே கனவுகளுடன் இருப்பவர். ஏழைகளை விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பது அவரது கனவு. அந்த கனவை நிறைவேற்ற ஒரு விமான நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்
விமான நிறுவனம் தொடங்க அவருடைய ஐடியாவை செயல்படுத்த எந்த வங்கியும் அவருக்கு உதவவில்லை. கடைசியில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்தை நடத்தி வரும் பரோஷ் கோஸ்வாமியை சந்தித்து தனது திட்டத்தை கூறுகிறார். அந்த ஐடியா மிகச் சிறப்பாக இருந்ததால் அந்த ஐடியாவை செயல்படுத்தினால் தன்னுடைய பிசினஸ்க்கே ஆபத்து என்றும் புரிந்து கொண்ட பரோஸ், செய்யும் தந்திரமும், அந்த தந்திர வலையில் விழுந்த சூர்யாவின் பரிதாபமான நிலைமையுடன் உடன் முதல் பாதி முடிவடைகிறது
மனைவி பொம்மி கொடுக்கும் ஊக்கத்தால் மீண்டும் தனது முயற்சியை தொடரும் மாறன், வெற்றியின் விளிம்பில் இருக்கும்போது மீண்டும் பரோஸ் செய்யும் சதி, அதனால் அடையும் தோல்வி, கூட இருந்தவர்களே பணத்திற்காக தோண்டிய குழி ஆகியவற்றை அறியும் மாறன், அதன்பின் துணிந்து எடுத்த முடிவாலும் ஊர்மக்கள் கொடுத்த ஒத்துழைப்பாலும் எப்படி ஜெயித்தார் என்பதுதான் கிளைமாக்ஸ்
சூர்யா என்ற நடிப்பு அரக்கனின் ஒட்டுமொத்த நடிப்பை வெளிப்படுத்தும் படம் இதைவிட வேறு ஒன்று அமையுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. மீண்டும் சுதாவே ஒரு கதையை சூர்யாவுக்கு மீண்டும் யோசித்தால் கூட இப்படி ஒரு கச்சிதமான மாறன் போன்ற ஒரு கேரக்டரை உருவாக்குவாரா என்பது சந்தேகம் தான்.
ஒரு உடுப்பி ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு ஒரு தோசையை உதாரணமாகக் கொண்டு ஒரு விமான நிறுவனத்தை எப்படி ஆரம்பிப்பது என்பதை புரியவைக்க சூர்யா பேசும் ஒவ்வொரு வசனமும் அபாரம். ரத்தன் டாட்டாவே விமான நிறுவனத்தை தொடங்க 20 வருடமாக முயற்சி செய்து தோல்வி அடைந்தார் என்று பரேஷ் கூறும்போது, ‘நான் ரத்தன் டாடா இல்லை’ என்று கூறும் தெனாவெட்டு மலைக்க வைக்கின்றது
நூறு வருஷத்துக்கு முன்னாடி கரண்ட் வேணாம்னு சொன்னாங்க, அம்பது வருஷத்துக்கு முன்னாடி கார் வேணாம்னு சொன்னாங்க. இதெல்லாம் முடிவு செய்வது யார்? என்ற கேள்வி ஒவ்வொரு சாமானியனின் கேள்வி.
தந்தை உடல் நலம் இல்லாமல் இருப்பதை அறிந்து அவரை பார்ப்பதற்காக விமான நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்வதற்காக தவிக்கிற தவிப்பு, சூர்யா வருவதற்கு முன்னரே தந்தை இறந்ததை அறிந்து அம்மாவுடன் சேர்ந்து கதறி அழும் அந்த நடிப்பை சூர்யாவை தவிர வேறு யாராவது கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே
சூர்யாவின் ஐடியாவை உலகமே எதிர்த்தாலும் மனைவி பொம்மி அவரை முழுதாக நம்பி, ஒவ்வொரு தோல்வியின் போதும் துவண்டுவிடாமல் ‘நான் இருக்கின்றேன்’ என்று ஆறுதல் கூறும் மனைவி கேரக்டரில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு வாழ்த்துக்கள்
மக்களை நம்பியா? அவர்கள் வார வாரம் மாறுவார்கள் என்று எகத்தாளத்துடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பரோஸ் கோஸ்வாமி கேரக்டரில் நடித்த பரேஷ் ரவாலுக்கு ஒரு பாராட்டு. ஒருசில காட்சிகளில் வந்தாலும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கேரக்டருக்கு உயிர் கொடுத்த மோகன்பாபு மிகச்சரியான தேர்வு
தங்கச்சி கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த மொத்த காசையும் சூர்யாவை நம்பி கொடுத்துவிட்டு கொஞ்சம் கூட பணம் குறித்து கவலைப்படாத காளி வெங்கட் ஆகட்டும், கள்ளம் கபடம் இல்லாமல் தான் சேர்த்து வைத்த ரூ.11 ஆயிரத்தை கொடுத்துவிட்டு இந்த பணம் பிளைட் வாங்க போதுமா? என அப்பாவியாக கேட்கும் கருணாஸின் நடிப்பு ஆகட்டும், சூர்யாவின் கனவை நனவாக்க கடைசி வரை உடனிருக்கும் நண்பர்களான விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் கேரக்டர்கள் ஆகட்டும் ஒவ்வொரு கேரக்டரும் உயிரோடு வாழ்ந்துள்ளனர்.
எப்படியாவது ஜெயிருச்சுருய்யா? என ஊர்வசியின் வசனம் ஒவ்வொரு தாயும் தன் மகன் ஜெயிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் நடிப்பு. பத்திரிகையாளராக வரும் வினோதினி முதல் அப்துல்கலாம் கேரக்டரில் நடித்தவர் வரை ஒவ்வொரு கேரக்டரும் தங்கள் பகுதியை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர்
கொஞ்சம் பிசகினால் ஆர்ட் பிலிம் ஆக மாறிவிடும் அபாயமுள்ள ஒரு கதையை தனது அபார திரைக்கதையால் பாமரும் புரியும் வகையில் ஒரு படம் கொடுத்த சுதா கொங்காராவை எப்படி பாராட்டினாலும் தகும். இந்த படம் பணக்காரர்களுக்கு புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு பாமரனுக்கும் கண்டிப்பாக புரிய வேண்டும் என்பதற்காக அவர் ஒவ்வொரு காட்சியிலும் எடுத்த மெனக்கிடலை படம் பார்ப்பவர்கள் உணர முடியும். இப்படி ஒரு இயக்குனர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஜிவி பிரகாஷின் அபாரமான பின்னணி இசை படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுக்கின்றது. ஒருசில பாடல்கள் படத்திற்கு தேவையில்லை என்றாலும் ரசிக்க வைக்கின்றது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றால் அதை கொஞ்சம் கூட போரடிக்காமல் தொகுத்த எடிட்டர் சதீஷ் சூர்யாவுக்கு ஒரு சபாஷ்.
மொத்தத்தில் எப்போதாவது பூக்கும் ஒரு குறிஞ்சிப்பூ தான் இந்த சூரரைப் போற்று.
Comments