வீடியோவை பார்த்து கண்கலங்கிய சோனுசூட்: ரியல் ஹீரோவின் உணர்ச்சிபூர்வமான காட்சி!

திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் இந்த கொரனோ காலத்தில் ஏராளமான பொது மக்களுக்கு உதவி செய்ததன் மூலம் ரியல் ஹீரோவாக மாறியுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம்

ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாகட்டும், விவசாயி ஒருவர் தனது மகள்களை ஏரில் பூட்டி உழுதது தெரிந்த உடன் அவருக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்ததாகட்டும், தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற மூதாட்டிக்கு சிலம்ப பயிற்சி பள்ளியை ஆரம்பிக்க திட்டமிடுவதாகட்டும், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை இழந்து காய்கறி கடை வைத்த இளம் பெண்ணுக்கும் சாப்ட்வேர் பணி வாங்கிக் கொடுத்ததாகட்டும் அதற்கெல்லாம் மேலாக தனது பிறந்த நாளில் 3 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிக் கொடுத்ததாகட்டும் என சோனு சூட் அவர்களின் உதவிகள் குறித்த செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட சோனு சூட் சமீபத்தில் கபில் சர்மா தொகுத்து வழங்கும் பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். சோனி டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் சோனு சூட் அவர்களால் உதவி பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் உருக்கமாக அவருக்கு நன்றி தெரிவிக்க, புலம்பெயர் தொழிலாளர்களின் நன்றி தெரிவிக்கும் இந்த வீடியோவை பார்த்து மேடையிலேயே கண் கலங்கி சோனுசூட் நின்ற காட்சி இந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சோனு சூட் அவர்களுக்கு வழக்கம்போல் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது