விஜய் சேதுபதி இல்லாமல் 'சூது கவ்வும் 2': மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

விஜய் சேதுபதி நடித்த ’சூது கவ்வும்’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிவி குமார் தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் அதில் விஜய் சேதுபதி குறித்த காட்சிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக்செல்வன், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் கருணாகரன் தவிர வேறு யாரும் இல்லை என்பது தற்போது வெளியாகி உள்ள மோஷன் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்குகிறார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா, ராதாரவி, கருணாகரன், எம்எஸ் பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் என்பவரது இசையில் கார்த்திக் தில்லை ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த மேலும் சில அப்டேட்டுகள் விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.