முதல்முறையாக அரசிடம் சோனுசூட் வைத்த வேண்டுகோள்: செவிசாய்க்குமா அரசு?
- IndiaGlitz, [Wednesday,August 26 2020]
இந்த கொரனோ காலத்தில் பாலிவுட்டின் வில்லன் நடிகர் சோனு சூட், இந்திய மக்களின் ஹீரோவாக மனதில் பதிந்தார் என்பது தெரிந்ததே. கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர் செய்த உதவிகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும் அவர் இதுவரை அரசிடம் எந்த வித கோரிக்கையையும் சலுகையையும், உதவியையும் எதிர்பார்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முதல் முதலாக அரசிடம் ஒரு கோரிக்கையை சோனுசூட் முன் வைத்துள்ளார். கொரோனா காலத்திலும் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகளை நடத்த மத்திய அரசு உறுதியாக இருக்கும் நிலையில் இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாணவர்களின் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் வேண்டாம் நடிகர் சோனு சூட் அரசுக்கு தனது சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார்
செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை ஜே.ஈ.ஈ தேர்வுகளும், செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவான வழக்கில் நீதிமன்றம் இந்த தேர்வுகளை நடத்த அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு இந்த தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் கொரோனா காலத்தில் இந்த தேர்வுகளை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை அடுத்து நடிகர் சோனு சூட் தனது சமூக வலைத்தளத்தில், ‘கொரோனா காலத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில் மாணவர்களின் வாழ்க்கையில் நாம் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றும், எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகளை சூழ்நிலை கருதி ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்
மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்ந்து வரும் சோனுசூட் அவர்களின் இந்த கோரிக்கையை அரசு ஏற்று, நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வை ஒத்தி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்