ஏழைகளின் நாயகன் நடிகர் சோனு சூட்டுக்கு சிறப்பு விருது வழங்க இருக்கும் ஐ.நா.!!!
- IndiaGlitz, [Wednesday,September 30 2020]
இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் நடிகர் சோனு சூட். தன்னுடைய சொந்த செலவில் வெளி மாநிலங்களில் வேலைப்பார்த்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து வந்ததோடு சிறப்பு விமானங்களையும் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் கொரோனா தாக்கத்தால் வேலை இழந்து தவித்து வந்த பலருக்கு மீண்டும் வேலைக் கிடைக்கவும் ஏற்பாடு செய்தார்.
அதோடு கர்நாடகாவில் விவசாயி ஒருவருக்கு டிராக்டரையே வாங்கிக் கொடுத்து அசத்தினார். ஆன்லைன் வகுப்புகளில் சில ஏழை மாணவர்கள் கலந்து கொள்ளவழி ஏற்படுத்திக் கொடுத்தார். இப்படி இவருடைய அடுக்கடுக்கான மனிதநேயச் செயல்கள் இந்திய அளவில் மிகவும் பாராட்டத்தக்க விஷயமாகப் பார்க்கப் பட்டது. மேலும் சில ஊடகங்கள் இவரைக் குறித்து ஏழைகளின் நாயகன் எனவும் பாராட்டு பத்திரங்களை வாசித்தன.
அந்த வகையில் தற்போது ஐ.நா அவை நடிகர் சோனு சூட்டிற்கு சிறப்பு விருதினை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக பல்வேறு வகைகளில் உதவிகளைப் புரிந்த சோனு சூட்டின் மனிதநேயத்தைப் பாரட்டும் விதமாக சஸ்டைபள் டெவலெப்மெண்ட் கோல்ஸ் என்ற விருதினை ஐ.நா வழங்க இருக்கிறது. அதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் சோனு சூட் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்வேன் என்று கூறியுள்ளார்.
கொரோனா நேரத்தில் மக்களுக்காக நின்ற சிலருக்கு இப்படியான சர்வதேச விருதுகள் அறிவிப்பதைக் குறித்து பலரும் ஐ.நா விற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் புகழப்படும் நாயகர்களுக்கு இப்படியான சிறப்பு அடையாளங்கள் கிடைப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.