'புதுப்பேட்டை 2' படத்தில் நடிப்பாரா சோனியா அகர்வால்? அவரே கூறிய பதில்..!

  • IndiaGlitz, [Saturday,February 10 2024]

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான ’புதுப்பேட்டை’ என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த தனுஷ், இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சினேகா உள்பட மற்ற நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட சோனியா அகர்வால், ’புதுப்பேட்டை 2’ படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் இது குறித்து அவரே ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

’புதுப்பேட்டை 2’ படத்தில் நடிக்க கூப்பிட்டால் கண்டிப்பாக நான் நடிப்பேன், நடிப்பு என்னுடைய தொழில், செல்வா கூட சேர்ந்து பணி புரிவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சோனியா அகர்வால் கூறினார். ஆனால் அதே நேரத்தில் ’புதுப்பேட்டை 2’ படத்தில் என்னை நடிக்க அழைப்பார்களா என்று தெரியவில்லை, இதுவரை யாரும் என்னை அணுகவில்லை என்றும் அவர் கூறினார்.

பொதுவாக ஒரு படத்தை இரண்டாம் பாகமாக எடுக்கும் போது முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அப்படியே இரண்டாம் பாகத்தில் நடித்தால் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை செல்வராகவன் அறிந்திருப்பார் என்பதால் கண்டிப்பாக அவர் சோனியா அகர்வாலை நடிக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.