அரிசிக்கும் பருப்புக்கும் போய் நிற்ககூடாது: ரஜினி கொடுத்த நிவாரண உதவி குறித்து பிரபல தயாரிப்பாளர்
- IndiaGlitz, [Tuesday,May 05 2020]
ஊரடங்கு உத்தரவு காரணமாக நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பழம்பெரும் தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்களின் கோரிக்கையை ஏற்று 750 தயாரிப்பாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் 24 டன்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை பொருட்களை கொடுத்து உதவி செய்தார். ரஜினியின் இந்த உதவிக்கு கே.ராஜன், பேரரசு உள்பட பலர் நன்றி தெரிவித்தனர்.
ஆனால் ரஜினியின் இந்த உதவியையும் ஒருசிலர் அரசியலாக்கி விமர்சனம் செய்துள்ளனர். நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் ரஜினியின் உதவி குறித்து கூறியபோது ‘நிவாரணம் வழங்கியது ரஜினியின் பெருந்தன்மை என்றாலும், தயாரிப்பாளர்கள் அரிசிக்கும் பருப்புக்கும் போய் நிற்ககூடாது. அது தன்மானத்துக்கு இழுக்கு என்று கூறியுள்ளார்.
அதேபோல் பாபு கணேஷ் என்ற தயாரிப்பாளர், ‘ரஜினி நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக குறைந்த சம்பளத்தில் ஒரு படம் நடித்து கொடுத்து நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யலாம் என்று கூறியுள்ளார். சுரேஷ் என்ற இன்னொரு தயாரிப்பாளரோ, ‘தயாரிப்பாளர்கள் முதலாளிகள் என்றும், நடிகர்கள் அவர்களிடம் சம்பளம் வாங்குபவர்கள் என்றும் முதலாளிகளுக்கு நடிகர்களிடம் நிவாரணம் பெறுவது கேவலம் என்றும், அப்படியே நிவாரணம் கொடுக்க விரும்பினால் 50,000 ரூபாயோ அல்லது 1 லட்சம் ரூபாய் தனித்தனியாக வழங்கினால் கெளரவமாக இருக்கும். என்று கூறியுள்ளார்.
நலிந்த தயாரிப்பாளர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்த ரஜினியின் உதவியையும் ஒருசிலர் அரசியலாக்கி வருவது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது