ஊரடங்கு உத்தரவு போட்டும் திருந்தாத டெல்லி மக்கள்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். இந்த 21 நாட்களிலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 21 நாட்கள் பொதுமக்கள் கட்டுப்பாடாக இல்லை எனில் நாடு 21 வருடங்கள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என்பதால் இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்
பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று பெரும்பாலானோர் வீட்டுக்குள் முடங்கி இருந்தாலும் ஒரு சில அசட்டு தைரியம் காரணமாகவும், நிர்ப்பந்தம் காரணமாகவும் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பிரதமர் இருக்கும் தலைநகர் டெல்லியிலேயே பொதுமக்கள் நடமாட்டம் வழக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
கொரோனா வைரஸின் தீவிரத்தை டெல்லியில் உள்ள படித்தவர்களே உணராத போது சிறு கிராமத்தில் உள்ளவர்கள் எப்படி உணர்ந்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறது. மேலும் டெல்லி, சென்னை உள்பட ஒரு சில பெருநகரங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கவில்லை என்றும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது போன்ற நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
21 நாட்கள் பொதுமக்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் நஷ்டம் ஏற்படுவது என்னவோ உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் எல்லாவற்றையும் விட மனித உயிர் மிகவும் முக்கியம் என்பதால் அரசின் அறிவுரையை ஏற்று அனைவரும் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்