விவசாயத்திற்காக சாப்ட்வேர் பணியை உதறித்தள்ளிய தமிழக இளைஞர்
- IndiaGlitz, [Tuesday,June 20 2017]
விவசாயம் என்றாலே பாதுகாப்பு இல்லாத தொழில் என்றும், விவசாயம் பார்ப்பவர்கள் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றே கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துகின்றன. ஆனால் கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று வங்கிகளையும் அரசுகளையும் கெஞ்சிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு நவீன டெக்னாலஜி மூலம் விவசாயம் செய்து அதை லாபகரமான தொழிலாக மாற்றலாம் என்று தமிழக இளைஞர் ஒருவர் நிரூபித்து காண்பித்துள்ளார்.
எம்.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து ஐடி நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணி செய்து கொண்டிருந்த கரூரை சேர்ந்த சரவணன் என்பவர், விவசாயம் மீது சிறுவயதில் இருந்தே இருந்த ஆர்வம் காரணமாக தான் செய்து கொண்டிருந்த வேலையை உதறி தள்ளிவிட்டு விவசாயம் செய்ய சொந்த ஊர் திரும்பினார்
தனது தந்தையின் விவசாய அனுபவம் மற்றும் இணையதளங்கள் மூலம் கிடைத்த டெக்னாலஜி தகவல்கள் ஆகியவற்றை இணைத்து பாலிஹவுஸ் பார்மிங் (Polyhouse Farming) என்ற முறையில் தனக்கு சொந்தமான நிலத்தில் வெள்ளரியை விளைய வைத்துள்ளார். சாதாரண விவசாயத்திற்கும் பாலிஹவுஸ் விவசாயத்திற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகவும், இதில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறுகிறார் சரவணன். இந்த நவீன விவசாய முறை எந்தவித காலநிலையையும் பயிர்கள் எதிர்கொள்ளும் என்றும், சொட்டுநீர் பாசனம் மூலம் செடிகளுக்கு தண்ணீர் விடப்படுவதால் அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இவர் பயிர்களை நார்ப்பைகளில் பயிரிடுவதால் பூச்சிமருந்து கொல்லியின் ஆபத்தும் இல்லை.
விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு, நிவாரணம் வேண்டும் என்று அரசுகளை சார்ந்து இருக்காமல் சரவணனைப் போல் நவீன டெக்னாலஜி மூலம் அனைத்து விவசாயிகளும் விவசாயம் செய்தால் லாபம் பெறுவது மட்டுமின்றி நாட்டையும் வளப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.