இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்தேன்: கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய மென்பொறியாளர் லாவண்யா
- IndiaGlitz, [Saturday,February 24 2018]
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மென்பொறியாளர் லாவண்யா, பணியை முடித்துவிட்டு இரவில் சென்னை பெரும்பாக்கத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்தபோது மூன்று கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். அவரது உடலில் இருந்த தங்க நகைகள், லேப்டாப், ஆப்பிள் ஐபோன் ஆகியவற்றை திருடிய கொள்ளையர்கள் அவரது பின்னந்தலை, கை, மார்பு உள்ளிட்ட இடங்களில் அரிவாளில் வெட்டினார்கள்
இந்த நிலையில் உயிருக்கு போராடிய தான் தப்பியது எப்படி என்பது குறித்து அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். என்னை மூன்றுபேர் வழிமறிக்கும்போதே அவர்கள் எனது பொருட்களை திருட வந்துள்ளனர் என்பதை புரிந்து கொண்டு நான் அவர்களிடம் என்னிடம் இருக்கும் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், என்னை உயிருடன் மட்டும் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. கொள்ளையர்களில் ஒருவன் இரும்புக் கம்பியால் என் பின்னந்தலையில் தாக்கினான். மூன்று பேர்களும் தொடர்ந்து தாக்கியதால் பலத்த காயமடைந்த நான் அவர்களிடமிருந்து தப்பிக்க இறந்தது போல் நடித்தேன். பின்னர் தான் அவர்கள் நான் உயிரிழந்து விட்டதாக கருதி என்னை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.
அந்த நேரத்தில் அங்கிருந்த மக்களை நான் குறைகூற விரும்பவில்லை. அவர்களும் பயத்தில் தான் இருந்தனர். நல்லவேளையாக ஒரு லாரி டிரைவர் என்னை காப்பாற்றி போலீசுக்கு போன் செய்தார். போலீசார் ஒருசில நிமிடங்களில் வந்து என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். உயிர் பிரியும் நிலையில் இருந்தபோதும் அந்த நேரம் என் மனதில் தோன்றியதெல்லாம் எனது பெற்றோரின் ஒரே மகளான நான் அவர்களை விட்டு போய்விடக்கூடாது என்ற மன உறுதியில் போராடினேன். என் தந்தையின் போன் நம்பரை போலீசாரிடம் கொடுத்து தகவல் கொடுக்க சொன்னேன். இரண்டு நாட்கள் உயிருக்கு போராடிய நான் கண் விழித்து பார்த்தபோது தான் என் பெற்றோர் நிம்மதியடைந்தனர். போலீசார் உள்பட பலரும் எனது துணிச்சலை பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. நான் முற்றிலும் குணமடைந்த பின்னர் தமிழக அரசின் உதவியுடன் பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டுவேன்'' என்று லாவண்யா தெரிவித்துள்ளார்