கால் மூட்டு எலும்பு விலகல்... தானே கையால் தட்டியே சரிசெய்த வீராங்கனை! வைரல் வீடியோ..!

ஸ்காட்லாந்தில் ஸ்காட்டிஷ் அணிக்கும் கலிடோனியன் அணிக்கும் இடையே பெண்கள் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்காட்டிஷ் அணி 6-0 என்ற கணக்கில் பின் தங்கிய நிலையில் விளையாடி கொண்டிருந்தது.

ஸ்காட்டிஷ் அணி ஒரு கோலைக்கூட அடிக்காத நிலையில் இருந்த போது கேப்டன் Jane O’ Toole தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தார். ஜேனுக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைக்கிறது. பந்தை உதைக்க ஜேன் தயாராக இருக்கும் நேரத்தில் எதிர் அணியில் இருந்து ஒரு வீராங்கனை அசுர வேகத்தில் ஜேன் மீது பாய்கிறார். ஜேன் தலைக்குப்புற கவிழ்ந்து பின்னர் வலது பக்கமாக சரிந்து விழுகிறார். சரிந்து விழும் அதே நேரத்தில், வலது காலின் முட்டி எலும்பு இன்னொரு பக்கமாக பிசகி வெளியே தெரிகிறது. எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது கையை சுத்தி போன்று பயன்படுத்துகிறார் ஜேன். தனது வலது கையால் சுத்தியலைக் கொண்டு அடிப்பது போல “பட் பட்“ எனத் தட்டுகிறார். சில தட்டுக்களுக்கு பின்னர் கால் பழைய நிலைக்கு திரும்புகிறது.

விழுந்த வேகத்தில் உதவியாளரையோ, மருத்துவரையோ எதிர்ப்பார்க்காமல் வலியைப் பொறுத்துக் கொண்டு கேப்டன் ஜேன் செய்த இந்த வீரச் செயல் அந்த மைதானத்தில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எதிர் அணியினர் கூட கேப்டனின் ஜேனின் செயலைப் பாராட்டி அவரை உற்சாகப் படுத்தினர்.

தன்னை நிதானப் படுத்திக் கொண்ட கேப்டன் ஜேன் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உடனே ஆட்டத்தில் கலந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. கேப்டன் ஜேனுக்கு இருக்கும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் வெறியையும் தற்போது இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.