வீடு தேடி வரும் 2000 ரூபாய் நோட்டு. இ-காமர்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சி
- IndiaGlitz, [Friday,December 23 2016]
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்ததில் இருந்து வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு, வரிசையில் பணம் எடுக்க நின்றவர்களில் சுமார் 150 பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஸ்னாப்டீல் நிறுவனம் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை உங்களுக்கு வீடு தேடி தரும் புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது. 'கேஷ் டூ ஹோம்' என்ற இந்த புதிய சேவையின் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து நேரடியாக டோர் டெலிவரி செய்வதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.,
வங்கியில் கணக்கு உள்ள வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் நோட்டை கொண்டு வருபவரிடம் உள்ள ஸ்வைப்பிங் மிஷினில் அவர்களது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம் அல்லது ஃப்ரீசார்ஜ் (FreeCharge) கணக்கு மூலமாகவும் பணம் செலுத்தலாம். பண பரிமாற்றம் செய்து முடித்ததும் வாடிக்கையாளரிடம் பணம் ஒப்படைக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த அனைத்து வங்கி டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம் என்றும் ஸ்னாப்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவைக்கு இந்நிறுவனம் ரூ.1 மட்டுமே சேவை கட்டணத்தை வசூல் செய்கிறது.
இப்போதைக்கு இந்த சேவையை பெங்களூர் மற்றும் குர்கிராம் ஆகிய பகுதிகளில் சோதனை வடிவில் சேவை செய்து வரும் ஸ்னாப்டீல் நிறுவனம் விரைவில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த சேவையை நீட்டிக்க உள்ளது.