பாம்பை முகக்கவசமாக அணிந்து பேருந்தில் பயணித்த நபர்… கிலி பிடிக்கும் சம்பவம்!!!
- IndiaGlitz, [Wednesday,September 16 2020]
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்தே மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளி போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் புழங்க ஆரம்பித்து விட்டோம். தற்போது கொரோனாவை தடுக்க இதைத்தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயத்தால் உலக நாடுகளும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதனால் பொது மக்கள் வெளியிடங்களில் நடமாடும்போது மாஸ்க் அணிவதை பழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் வசிக்கின்ற நபர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அப்போது பாம்பை முகக்கவசம் போல கழுத்து மற்றும் வாய் பகுதியில் மூடியிருக்கும் வகையில் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். இக்காட்சியை பார்த்த பலரும் அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கின்றனர்.
இதுகுறித்து அவரது அருகில் இருந்த இன்னொரு நபர், முதலில் பார்க்கும் போது பாம்பு படத்தை பொறித்த மாஸ்க்கை அணிந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த பாம்பு கொஞ்ச நேரத்தில் பேருந்தின் முன்னால் கம்பியை பிடித்து தாவியது. இதைக் கண்டதும் நான் அதிர்ந்தே போய்விட்டேன் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி இருக்கிறது.
கொரோனா நேரத்தில் வைரம் பதித்த மாஸ்க், முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட மாஸ்க், ஏன் பட்டுத் துணியால் செய்யப்பட்ட மாஸ்க்கைக் கூட பார்த்தோம். ஆனால் முதல் முறையாக பாம்பை மாஸ்க்காக அணிந்த நபரை இப்போதுதான் பார்க்கிறோம் என்று இணையத்தில் பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இங்கிலாந்து சுகாதாரத்துறை இனிமேல் பேருந்தில் பயணிக்கும்போது துணியால் ஆன முகக்கவசத்தை அணியுமாறு வலியுறுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.