5 நிமிடம் செல்போன் இல்லாமல் இருக்க முடியுமா? இந்தியர்களைப் பாதிக்கும் நோமோஃபோபியா!

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

சமீபத்தில் செல்போன் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியாவிலுள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பலரும் நோமோஃபோபியா எனும் புதுவகை பயத்தை அனுபவித்து வருவதாக தகவல் வெளியிட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபோபியா என்றால் நமக்கு தெரியும். பயத்தினால் அவதிப்படுவது. அதென்ன Nomophobia? No mobile Phone என்பதுதான் இதன் விளக்கம். அதாவது செல்போனை பேட்டரி அல்லது வேறொரு காரணத்திற்காகப் பயன்படுத்த முடியாத சூழல் வரும்போது பெரும்பாலான மனிதர்களுக்கு பயம், அதீத உணர்ச்சி வசப்படுதல், கவலை, பதற்றம் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாகச் சமீபத்தில் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓப்போ நிறுவனம் மற்றும் Counterpoint நிறுவனம் இரண்டும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவிலுள்ள 4 ஸ்மோர்ட்போன் பயனாளர்களில் 3 பேருக்கு இந்த நோமோஃபோபியா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதிலும் 65% செல்போன் பயனாளர்கள் தங்களது செல்போனில் பேட்டரி தீர்ந்து போகும் சமயங்களில் அதிகப் பதற்றம் மற்றும் உணர்ச்சி வசப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக செல்போன் இல்லாவிட்டால் என்னவாகும் என்ற கவலை இன்றைய நவீனயுகத்தில் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒருவேளை செல்போனுக்கு எதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? பேட்டரி தீர்ந்து விட்டால் என்ன செய்வது? என்பதுபோன்ற கவலை இந்தியாவில் அதிகரித்து விட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது. அதிலும் பெண்களை விட (74%) ஆண்களுக்கே இந்த கவலை (82%) அதிகமாகக் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி சதா செல்போனையே பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் பலரும் பேட்டரி பயன்பாடு குறைந்துபோன உடனேயே தங்களது செல்போனை மாற்றவும் செய்கிறார்களாம். அந்த வகையில் 60% இளைஞர்கள் பேட்டரி குறைபாடு காரணமாகத் தங்களது செல்போன்களை விரைவில் மாற்றிவிடுவதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கும் எதிலும் செல்போன் மயமாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில் செல்போன் இல்லாமல் இருப்பது கடினம்தான். ஆனால் செல்போனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையே ஒரு பெரிய தொல்லையாக மாறும் அளவிற்கு இந்தியர்களின் செல்போன் பயன்பாடு தற்போது அதிகரித்து இருக்கிறது. இதை இளைஞர்கள் கவனத்தில் கொண்டு செல்போன் பயன்பாட்டை குறைத்துக்கொண்டால் மட்டுமே இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.