கமல்ஹாசன் பிரச்சாரக் கூட்டத்தில் காலணி வீச்சு
- IndiaGlitz, [Thursday,May 16 2019]
சமீபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் இந்து தீவிரவாதி குறித்து கமல் பேசிய சர்ச்சைக்கருத்து குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்த கமல்ஹாசன் நேற்று மாலை மீண்டும் திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் செய்தார். ஆனால் சில மணி நேரங்களில் அவர் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு திருப்பரங்குன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்து தீவிரவாதம் குறித்து தான் கூறிய கருத்து சரித்திர உண்மை என்றும், உண்மை கசக்கத்தான் செய்யும், தீவிர அரசியலில் இறங்கிவிட்டதால் தன்னுடைய பேச்சும் இனி தீவிரமாக இருக்கும் என்றும் ஆவேசமாக பேசினார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரை நோக்கி காலணி வீசப்பட்டது. அங்கிருந்த சிலர் 'இது இந்து நாடு', 'பாரத் மாதாஜிக்கு ஜே' என்றும், கமல்ஹாசனே வெளியேறு என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். உடனடியடியாக அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்பின்னர் கமல்ஹாசன் பேசியபோது, 'அந்த விரோதி, இந்த விரோதி, இந்து விரோதி என்று கூறி என்னிடம் விளையாட்டு காட்ட வேண்டாம். நான் யாருக்கு விரோதி என்பது மக்களுக்கு தெரியும். உங்களுடைய நேர்மையின்மை தான் என்னை உங்களுடைய விரோதியாக மாற்றியுள்ளது' என்று கூறினார்.