ஸ்கெட்ச் - சமநிலை அற்ற காதல் ஆக்க்ஷன் கலவை
விக்ரம் கடைசியாக நடித்த இரு முகன் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களை திருப்தி படுத்தியது என்று சொல்லலாம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வாலு இயக்குனர் விஜய் சந்தரின் இயக்கத்தில் விக்ரம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வந்திருக்கும் இந்த ஸ்கெட்ச் எந்தளவுக்கு திருப்தி அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
ஸ்கெட்ச் என்கிற விக்ரம் தன் நன்பர்கள் ஸ்ரீமன், விஸ்வநாத் மற்றும் கல்லூரி வினோத் ஆகியோருடன் சேர்ந்து சேட் ஹரீஷ் பெருடியின் பைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டாதவர்களின் வண்டிகளை பறிமுதல் செய்யும் வேலை செய்கிறார். கல்லூரி மாணவி ஸ்ரீ ப்ரியங்காவின் ஸ்கூட்டியை எடுத்து செல்ல முற்படும்போது அவர் தோழி தமன்னா சண்டைக்கு வர அவரிடம் மனதை பறி கொடுக்கிறார். விக்ரம் காதலியை பின் தொடர்ந்து காதல் சொல்லாமல் தவிக்கிறார் நண்பர்களிடம் கெத்து காட்ட காதல் ஓகே ஆகிவிட்டது போல் நடிக்கிறார். ராயபுரத்தில் வெவ்வேறு ரவுடி கும்பல் தலைவர்கள் ஆர் கே சுரேஷ் மற்றும் பாபுராஜ் ஆகியோரிடம் விக்ரம் மோத இருவரும் அவரை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறார்கள். தமன்னாவின் காதல் கூடி வரும் தருவாயில் விக்ரமும் அவர் நண்பர்களும் செய்யும் ஒரு காரியத்தால் அந்த இரண்டு ரவுடி கும்பல் மற்றும் போலீஸ் அவரை துரத்த விக்ரம் ஸ்கெட்ச் போட்டு அவர்களை ஜெயிக்கிறாரா தமன்னாவை கைப்பிடிக்கிறாரா இல்லையா என்பதே மீதி கதை.
தன்னுடைய நடிப்பு திறமைக்கும் வயதுக்கும் சற்றும் பொருந்தாத வேடம் என்றாலும் விக்ரம் முடிந்த அளவுக்கு ஸ்டைல் காட்டி ஒப்பேற்றியிருக்கிறார். அவர் படத்துக்கு வரும் ரசிகர்கள் வேறு எது இல்லையென்றாலும் அவருடைய திறமையான நடிப்பால் ஸ்கோர் செய்யும் காட்சிகளை எதிர்பார்த்தே வருவார்கள் ஆனால் அப்படி ஒரு காட்சி கடைசிவரை இல்லை என்பதே பெரும் ஏமாற்றம். ஆனாலும் பாடல்களுக்கு அவர் ஆடும் எனர்ஜி நடனங்களும் சண்டை காட்சிகளில் பாய்ந்து எதிரிகளை துவம்சம் செய்ய்யும் இடங்களிலும் விசில் போட வைக்கிறார். அம்மு என்ற அய்யர் ஆத்து பெண்ணாக தமன்னா தன்னை சுற்றி சுற்றி வரும் விக்ரமை வெறுத்து ஒதுக்குகிறார் பின் ஒரு கட்டத்தில் அவர் பக்கம் சாய்கிறார். உன்ன எனக்கு எவ்வளவு புடிக்கும்னு உங்கூட வாழ்ந்து காட்டி புரியவைக்கிறேன்னு அவர் சொல்லும் வசனம் கவிதையென்றாலும் மருந்துக்கு கூட விக்ரமை அவருக்கு பிடிக்க காட்சிகள் இல்லாததால் ஓட்ட மறுக்கிறது. சிட்டியாக வரும் கல்லூரி வினோத் தன் காமடியால் கவர்கிறார் ஆனால் சூரி தான் பாவம் ஒரு ஒப்புக்கு சப்பான் கதாபாத்திரத்தில் வீணடிக்க பட்டிருக்கிறார். ஸ்ரீ பிரியங்கா ஹரீஷ் பெராடி ஸ்ரீமன் கபாலி விஸ்வநாத் பாபுராஜ் மற்றும் ஆர் கே சுரேஷ் போன்றவர்கள் தெரிந்த முகங்களாக வந்து போகிறார்கள்.
குழந்தைகளை தொழிலாளர்களாக அமர்த்துவதால் அவர்களுக்கு நேரும் அபாயகரங்களையும் ஒரு சமுதாயம் எப்படி ஒன்று கூடி அதை தடுக்க வேண்டும் என்கிற அவசியத்தை மைய கருவாக கொண்டு வந்ததில் நிச்சயம் இயக்குனரை பாராட்ட வேண்டும்.
குறைகள் என்று பார்த்தல் ஒரு சாதாரண ரவுடி கதையை அதை விட சாதாரணமாக சொல்லியிருப்பதால் பெரிதும் சறுக்கியிருக்கிறது ஸ்கெட்ச். இந்த கதையை எப்படி விக்ரம் தேர்ந்தெடுத்தார் என்கிற கேள்வி படம் முழுக்க வந்த வண்ணம் இருக்கிறது. ஒரு விடலை பையன் செய்ய வேண்டிய ரொமான்ஸ் சேஷ்டைகளை விக்ரம் செய்யவதை பார்க்க என்னவோ போல் இருக்கிறது. காட்சி கோர்வை தாறு மாறாக இருப்பதால் சில நல்ல விஷயங்கள் கூட அடி பட்டு போகின்றன. உதாரணத்திற்கு சிட்டி இறந்த பிறகு அவன் கல்லறைக்கு விக்ரமும் அவர் நண்பர்களும் மழையில் நனையாதபடி ஒரு தடுப்பு போடுவது மற்றும் தமன்னா விக்ரமுக்கு கொடுக்கும் அந்த வாட்ச்.
ஸ்கெட்சிக்கு பெரும் பலம் சேர்ப்பது தமனின் இசை. அச்சி புச்சி , கனவே கனவே, தாடிக்காரா, சீனி சிலல்லே என்று அணைத்து பாடல்களும் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும் நல்ல பலம் சேர்த்திருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவில் குறை சொல்ல எதுவும் இல்லை ஆனால் ரூபன் இன்னும் நன்றாக கத்திரி கோலை பயன் படுத்தி படத்தின் தொய்வை ஓரளவுக்கு சரி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்த கடைசி காட்சி கருத்தை முதலில் பிடித்து விட்டு அதை நோக்கி ஒரு ரவுடி மற்றும் காதல் கதையை பின்ன நினைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர் ஆனால் விக்ரம் வேதா மற்றும் அருவி போன்ற ஆழமான கருத்துகளை அழகாக உள் வாங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற பழமையான கதை போக்கு செல்லுபடி ஆகாது என்பதே நிதர்சனம்.
விக்ரமின் தீவிர ரசிகர்களும் அதிகம் எதிர்பார்ப்பில்லாதவர்களும் தாராளமாக ஸ்கெட்ச் பக்கம் போகலாம்
Comments