சீயான் விக்ரமுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- IndiaGlitz, [Monday,April 17 2017]
கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசனுக்கு அடுத்து ஒரு கேரக்டருக்காக அதிகமாக மெனக்கெடுவது சீயான் விக்ரம்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஷங்கரின் 'ஐ' உள்பட பல படங்களின் கேரக்டராகவே அவர் மாறிவிடும் அவரது அர்ப்பணிப்பான உழைப்பே இன்று அவரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சீயான் விக்ரமுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
விக்ரமின் ஆரம்பகால திரையுலக பயணம் பல கஷ்டங்களையும், சவால்களையும், தோல்வி மற்றும் அவமானங்களையும் பெற்றது. ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக பல வருடங்கள் காத்திருந்து பின்னர் பாலாவின் 'சேது' படம் மூலமாக அந்த வெற்றியை பெற்றார். அதன்பின்னர் அவருக்கு ஏறுமுகம்தான்.
தன்னம்பிக்கையுடன், கொடுத்த கேரக்டருக்காக உண்மையாக உழைத்த விக்ரமுக்கு 'தில், 'ஜெமினி', 'தூள்', 'சாமி'', 'பிதாமகன்', 'அன்னியன், கந்தசாமி', 'ஐ', 'இருமுகன்' என பல வெற்றிகள் கிடைத்தது. மேலும் பிதாமகன்' படத்திற்காக சிறந்த தேசிய விருது பெற்ற அவர் மேலும் பல விருதுகளை வென்று குவித்துள்ளார்.
'சேது' படத்தில் அவர் நடித்த மனநில சரியில்லாத கேரக்டர் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. அதேபோல் 'காசி' படத்தில் பார்வையற்றவராகவும், 'ஜெமினி' படத்தில் லோக்கல் ரவுடியாகவும், 'தூள்' படத்தில் கிராமத்தில் இருந்து சென்னை வந்து அரசியல்வாதியின் கொட்டத்தை அடக்குபவராகவும் சிறப்பாக நடித்திருந்தார். விக்ரம் நடிப்பில் முத்தாய்ப்பான ஒரு படம் 'சாமி'. ரஜினியே இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க நான் மிஸ் செய்துவிட்டேன்' என்று பாராட்டிய கேரக்டர்தான் 'ஆறுச்சாமி' என்பது குறிப்பிடத்தக்கது. 'பிதாமகன்' படத்தின் கேரக்டரை இன்றளவும் நடிக்க வேறு ஆள் இல்லை என்பதே உண்மை. மேலும் அம்பி, அன்னியன்,ரெமோ என மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் அவர் நடித்த 'அன்னியன்' படம் அனைவரையும் கவர்ந்த படம். இதேபோல் அவர் நடித்த கேரக்டர்களின் சிறப்பை சொல்லி கொண்டே போகலாம்.
சீயான் விக்ரம் மேலும் பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து மேலும் பல விருதுகளை குவிக்க வேண்டும் என்று இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் ஒருமுறை எங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.