தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா? அப்ப நெல்சன் என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Tuesday,November 24 2020]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 64ஆவது திரைப்படமான ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியிருந்தாலும் அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் அந்த படத்தில் இருந்து ஒருசில காரணங்களால் விலகினார். இதனை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கபவர்கள் என ஒருசில இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டபோது ’டாக்டர்’ பட இயக்குனர் நெல்சன் பெயர் முதலாவதாக இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜய்யின் அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்க இருப்பதாகவும் எஸ்ஜே சூர்யா சொன்ன கதை விஜய்க்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் பிடித்து விட்டதால் ’தளபதி 65’ படத்தின் இயக்குனர் எஸ்ஜே சூர்யா தான் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த முறையான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் வரும் ஜனவரி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தளபதி விஜய், ஜோதிகா நடித்த ’குஷி’ என்ற சூப்பர்ஹிட் படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் நெல்சன் சொன்ன கதை விஜய்க்கு ஓகே என்றாலும் உடனடியாக படப்பிடிப்பை தொடங்க நெல்சனுக்கு முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், அவர் ஏப்ரல் வரை ‘டாக்டர்’ படத்தின் போஸ்ட் புரடொக்சனில் பிஸியாக இருப்பதால், எஸ்.ஜே.சூர்யாவை விஜய் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.