சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் எஸ்.ஜே.சூர்யா: இதுதான் காரணம்!

  • IndiaGlitz, [Monday,November 29 2021]

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த ’வாலி’ திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்திற்காக அவர் சுப்ரீம் கோர்ட் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவான ’வாலி’ திரைப்படத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா உள்பட பலர் நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாலி’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியிருந்தார் என்பதும் அஜித்தை வைத்தே அவர் ’வாலி’ படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’வாலி’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்ஜே சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றத்தை அணுகினார் என்பதும் ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போனிகபூர் ’வாலி’ படத்தின் ரீமேக் பணிகளை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு திரைப்படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் அதன் ரீமேக் உரிமை கதை எழுதியவருக்கு சொந்தமென ’ஆரண்யகாண்டம்’ பட வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பின் அடிப்படையில் எஸ்ஜே சூர்யா மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.