தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா? ஊரடங்கையும் மீறி பரவும் வைரஸ்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வருவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவையும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

நேற்று வரை தமிழகத்தில் கொரோனாவிற்கு 29 பேர் பாதிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கூடுதலாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டும் அந்த உத்தரவை ஒரு சிலர் கவனக்குறைவால் மீறுவதால்தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகவும் இனிமேலாவது அனைவரும் பொறுப்பை உணர்ந்து, ஊரடங்கு உத்தரவு முடியும்வரை, அரசு அறிவிப்புக்கு மதிப்புக் கொடுத்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.