ஒரே நேரத்தில் 130 வாகனங்கள் நொறுங்கிய சம்பவம்… பீதி ஏற்படுத்தும் சாலை விபத்து!
- IndiaGlitz, [Saturday,February 13 2021]
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இடையே தற்போது மோசமான வானிலை நிலவி வருகிறது. தற்போது ஆர்க்டிக் கடல் காற்று காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பனிப்பொழிவு அதிகரித்து இருக்கிறது. இந்தப் பனிப்பொழிவினால் பலரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோசமான வானிலை காரணமாக தற்போது டெக்சாஸ் நகரில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சாலையில் சென்று கொண்டு இருந்த 130 வாகனங்கள் திடீரென ஒன்றின் மீது ஒன்று பாய்ந்து அப்பளம் போல நொறுங்கிய காட்சி உகலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெக்சாஸில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போர்ட்வொர்த் எனும் பகுதியில் இந்த விபத்து நடந்ததாகவும் இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலில் சாலையில் சென்று கொண்டு இருந்த ஒரு கார் மீது பெரிய கண்டெய்னர் மோதியதாகவும் இதையடுத்து பின்னால் வந்த பலர் ஒன்றன்மீது ஒன்றாக மோதி அனைத்து வாகனங்களும் அப்பளம் போல நொறுங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 30 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சங்கிலித் தொடர் சாலை விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் மோசமான பனிப்பொழிவினால் சாலை முழுவதும் வழுவழுப்பாக இருந்ததாகவும் முன்னால் செல்லும் வாகனங்களை ஓட்டுநர்களால் பார்க்க முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.